பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருக்குறள் வகுப்பு நடத்தினோம். இந்த வகுப்பில் பத்து மாணவர்கள் படித்தனர். மாணவர்கள் என்று கூறுவது தவறு. நல்ல தகுதி வாய்ந்த பத்துப் பேர் படித்தனர். அவர்களுள் ஆத்தன்குடி கா.அரு.கா. காடப்ப செட்டியார் ஒருவர். இவர் நல்ல இலக்கியப் பிரியர்; இலக்கியத்தை அனுபவிப்பவர்; அழகுப் பிரியர் எதையும் நன்றாகச் செய்பவர். இவர் அன்று முதல் இன்று வரை நமக்கு மிகவும் நெருங்கிய உழுவலன்பராக விளங்கி வருகிறார். அவர்தம் பிள்ளைகளும் அப்படியே! அடுத்து பலவான்குடி கும. சுப்பிரமணியன் செட்டியார் ஒருவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ. படித்துத் தேறியவர். இவர் தகப்பனார் குமரப்ப செட்டியார் நமது உழுவலன்பர். இவரும் இவருடைய குடும்பத்தினரும் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அடுத்து, குன்றக்குடியில் இருந்த கு.மு. வீராசாமி என்பவர். இவர் நல்ல மனிதர். நாவிதர் ரா. சுப்புராமன், இன்னும் பலர்.

திருக்குறள் வகுப்பைத் தொடர்ந்து திருமுறை வகுப்பு தொடங்கப் பெற்றது. புலவர் தா. குருசாமி, புலவர் வை.சு. தண்டபாணி ஆகியோர் ஆசிரியர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் பத்துப் பத்துப் பேர் பயின்றனர்.

இடையிடையே சதுரப் பாட்டின் வழி அணுகி மகா சந்நிதானத்திடம் உத்தரவு பெற்று வெளியில் சொற்பொழிவுகளுக்கும் சென்று வந்து கொண்டிருந்தோம்.

அந்தச் சொற்பொழிவுகளில் கவனத்துக்குரியன ஐந்து, முதலாவது மதுரை தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய சொற்பொழிவு. தலைப்பு: 'தண்பாண்டி நாட்டில் தமிழ்' என்பது. அப்போது தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சீனிவாச ஐயங்கார் நல்ல வண்ணம் பேச்சு அமைந்ததாக அறிஞர்கள் பாராட்டி மகிழ்வித்தனர். இரண்டாவது திருப்புத்தூரில் வழக்கறிஞராகவும் கூட்டுறவாளராகவும் சமையத்தொண்டராகவும் பணி செய்து சிறப்புற்று விளங்கிய அ. ராமச்சந்திரன் பிள்ளை, ராம நாதபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவராகப் பணி