பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வந்தார். இன்றும் அவர் அருமைப் புதல்வர் டாக்டர் மு.அ. ராமசாமி, தன் தந்தையார் போலவே இருந்துவருவது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

செட்டிநாட்டரசர் தலைமையில் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாருக்குப் பாராட்டு விழா. பண்டிதமணி வடமொழியிலும் தென் தமிழிலும் சிறந்த அறிஞர். சுக்கிர நீதியை மொழி பெயர்த்துத் தந்தவர், திருவாசகத்துக்கு 'கதிர்மணி விளக்கம் என்ற பேருரை எழுதியவர். அடுத்து ரசிகமணி டி. கே. சி. க்குப் பாராட்டு விழா. டி. கே. சி.யைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கம்பன் பாடல்களையும் காரைக்கால் அம்மயைார் பாடல்களையும் அனுபவித்துப் பாடுவார். அடுத்து-தேவகோட்டை உ. ராம மெ. சுப. சேவு. மெ. மெய்யப்ப செட்டியாருக்கும் பாராட்டு விழா. மெய்யப்ப செட்டியார் நம்மோடு உடனிருந்த ஒரு புரவலர் என்றே கூறலாம்; அவ்வளவு பரிவு, கனிந்த அன்பு.

தமிழ் விழா மிகச் சிறப்பாக நடந்தது. அதற்குப் பிறகு ஆண்டுதோறும் நடந்து வந்தது. இத்தமிழ் விழா பறம்பு மலையில் பாரி விழாவாகச் சங்க இலக்கியங்களுக்கும், திருப்புத்துாரில் திருமுறை விழாவாகத் திருமுறைத் தமிழுக்கும் இப்போது நடந்து வருகிறது.

நமது மேடைகளில் அதிகமாகத் தமிழ் அர்ச்சனை செய்தி பேசப் பெற்றது. ஒரு ஆடிக் கிருத்திகையன்று குன்றக்குடியில் தமிழ் அர்ச்சனை தொடங்கியது. அடுத்து 1953-ல் கோவை மாவட்டம் பயணம் மிகவும் பயனுடைய பயணம். கொங்கு நாட்டுத் தங்கங்கள் என்று புகழ்ந்து பாராட்டத் தக்கப் பெரியோர்கள் எல்லாம் வரவேற்று, நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்கள். ஆர். கே. சண்முகம் செட்டியார், வி.சி. சுப்பய்யா கவுண்டர், சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆர். கே. சண்முகம் செட்டியார் சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற