பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

167


இலக்கியங்களில் ஈடுபாடுடையவர். வி. சி. சுப்பய்யாக் கவுண்டர் நல்ல பக்தர். வேளாண்மைக் குடிக்குரிய இயல்புகள் அனைத்தும் நிறைந்தவர். சி. எஸ். ரத்தினசபாபதி முதலியார் நல்ல தமிழார்வலர்; தமிழின நலம் காக்கும் பண்பாளர். நீதிக் கட்சியாளர் நல்ல கூட்டுறவாளரும்கூட! இவர்களுடைய கூட்டுறவு அந்தக் காலத்தில் மிகவும் பயன் தந்தது. வி.சி. சுப்பய்யாக் கவுண்டரின் பெருமுயற்சியால் பேரூர்த் திருக்கோயிலில் தமிழ் அர்ச்சனை தொடங்கப் பெற்றது.

தமிழ் அர்ச்சனை, வடமொழி வெறுப்பு இயக்கமல்ல. வழிபாடு-இதயங்கலந்ததாக அமையவேண்டும். அர்ச்சனையில் வழிபடுவோரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். கடிகாரத்தின் பெண்டுலம் அசைந்தால் மட்டும் போதாது. கடிகாரத்தின் முள்கள் நகர்ந்து காலம் காட்ட வேண்டும். அதுபோல திருக்கோயில்களில் மணிகள் அசைந்தால் மட்டும் போதாது, மனித இதயங்கள் அசையவேண்டும். நெகிழ்ந்து கொடுத்துப் பண்பாட்டு வளர்ச்சியைக் காட்ட வேண்டும். கல்லைப் பிசைந்து கனியாக்குதல் என்று திருவாசகம் கூறும். ஆன்மாவின் புலன்களை உழுது பக்குவப்படுத்தி வளர்த்தெடுப்பது வழிபாடு, மனிதன் விலங்கல்ல; மனிதனுமல்ல. அவனை விலங்குத் தன்மையிலிருந்து பையப்பைய மீட்டு மனிதனாக்கி அதன்பின் அருள்நலம் செறிந்த மாமனிதனாக்குவது வழிபாட்டின் நோக்கம். ஊனும் உயிரும் உணர்வும் உருகச் செய்யும் இயல்பு தாய்மொழிக்கே உண்டு. அதிலும் தமிழ், அருளியல் நலம் செழிப்பதற்கே முகிழ்த்த மொழி. ஆக, மனிதம் தோன்றவேண்டும். இதுதான் தமிழ் அர்ச்சனையின் விழுமிய நோக்கம். நாடு தழுவிய நிலையில் தமிழ் அர்ச்சனை விவாதப் பொருளாக மாறியது.

எந்த ஒரு செய்தி மக்கள் மன்றத்தில் பரவலாக விவாதிக்கப் பெறும் பொருளாக இடம் பெறுகிறதோ அந்தத்