பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

தொட்டி என்பதுபோல ஆன்மாவுக்காகத் தானே உடல்?ஆன்மா இல்லாத உடம்புபூஞ்செடி இல்லாததொட்டியைப்போன்றதுதான்” என்பது அது.(231)

“ஆடுகளை மேய்ப்பவன் அவற்றை நாய், நரிகள் தின்னவிட்டு விட்டு ஆட்டிடையன் மட்டும் பத்திரமாகத் திரும்பி வந்தால், அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? அதுபோல மக்கட் சமுதாயத்தின் அருள் வேட்கையைத் தூண்டி, அவர்களது ஆன்மாவை வளர்க்க வேண்டிய ஆதீன கர்த்தர்கள், சமுதாயத்தைப் பிற சமய நெறிகளுக்கும் வறுமைக்கும் ஆளாகும்படி விட்டு விட்டு, அவர்கள் மட்டும் வாழ்ந்தால் அதை என்ன என்று கூறுவது?” இது “ஆடு மேய்ப்போனும் ஆதீன கர்த்தரும்” என்னும் உவமை (252) மதம்மாற்ற நிலையைச் சிந்திக்க வைக்கும் செய்தி அல்லவா இது.

‘எங்கே போகிறோம்’ என்னும் பகுதி முற்றிலும் வானொலிப் பொழிவு. அடிகளார். மதுரை வானொலி வழியாக உலகுக்கு வழங்கிய உய்வு நெறி; பன்னிரு பொழிவுகள். அவற்றுள் நிறைவுப் பொழிவு (12) எங்கே போக வேண்டும்? என்பது. 15-8-1994இல் இருந்து 29-10-94 வரை இடை இடையே பொழியப் பட்டவை. தலைப்பின் வினாவும், முடிவின் விடையும் ஒத்திட்டு நோக்கத் தக்கன. உள்ளே உள்ள பொழிவுத் தலைப்புகளை நோக்கிய அளவாலேயே அடிகளார் கொண்ட குமுகாய மேம்பாட்டுக் காதலும், தொண்டின் உறைப்பும் தெள்ளிதிற் புலப்படுத்தும்.

கல்வி, உழைப்பு, வளர்ச்சி, பொருளாதாரம், வேளாண்மை, கால்நடை கூட்டுறவு, சமுதாயம், இலக்கியம், ஆன்மீகம் என்பவை முகப்புக்கும் முடிவுக்கும் இடை நின்ற சிந்தனைகள். குன்றக்குடி ‘மாதிரி’ ஊராக இந்திய நாட்டில் திகழ விதைக்கப்பட்ட வித்துகள் இவை எனல் சாலும்!

அடிகளார் எழுத்தைப் பற்றிய அறிஞர் எழுத்துகள் இணைப்பாக உள்ளன. இடம்பெற்ற இருபத்தைந்து திறனாய்வுரைகளுள் ‘மண்ணும் மனிதர்களும்’ பற்றியது இருபத்தைந்தாம் இறுதியது. அதில் அற்றை ‘மூலவர்’ அடிகளைப் பற்றி இற்றை ‘மூலவர்’ அடிகளார் உரை உயரிய மதிப்பீடாகத் திகழ்கின்றது. அதன் தொடக்கமே. “ஒரு வரலாறு தம் வரலாற்றை எழுதியுள்ளது. ஒரு காப்பியம் தாமே தம்மைப் பற்றி அடிமுதல் முடிவரை அளந்து பார்த்திருக்கின்றது. இஃதொரு சுயவிளம்பரம் அன்று; தற்பெருமை அளிக்கின்ற தம் முகவரியும் அன்று: எதிர்காலம் எந்தச் சார்புக்குள்ளாவது சிக்கி மிதமிஞ்சிய அன்புணர்வில் மிகைப்படுத்தி எழுதிவிடக் கூடாது என்ற கவன உணர்வு காரணமாக இருக்கலாம்” எனத் திகழ்கின்றது. வரலாற்றுப் பிழிவு கமழ்ந்து “இலட்சியப் பயணம் என்றும் தொடரும்” என்று நிறைவுறுகின்றது (539) நூல் நிறைவில் வாழ்த்தும் போற்றியுமாய், பாட்டும் உரையும் சிறக்கின்றன. (545)

உழவர் கை ‘திருக் கை’ எனப்படும். திருக்கை வழக்கம் கம்பர் இயற்றியதொரு நூல். திருக் கை என்பது ஏடு எழுதும் கை. இதனைத் திருக்கைக் கோட்டி என்னும் கல்வெட்டு வழிக்கால் அறியலாம்.