பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

169



எந்த ஒரு செய்தியையும் நேரடியாகப் பேசித் தீர்வு காண்பதே மனிதப் பண்பாடு. இந்தப் பண்பாட்டு முறையே காலப்போக்கில் ஜனநாயகமாக வளர்ந்தது. கலந்து பேசிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது வளர்ச்சிக்குரிய வழி, தனி ஒரு மூளை எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் அதன் முழுத்தன்மை ஆய்வுக்குரியதே. பல மூளைகள் ஒன்று கூடிச் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும். ஆனால், கருத்துப் பரிமாற்றத்தில் கலந்து கொள்ளும் மூளைகள் சிந்திக்கும் கடமையை எந்தக் காரணத்தை முன்னிட்டும் மற்றவர்களுக்கு ஒதுக்கி வைத்து விடக்கூடாது. நல்லதை எண்ணவும் செய்யவும் விரும்பு கிறவர்களுடைய சிந்திக்கின்ற சொல்லுகின்ற உரிமைகளை அடக்கக் கூடாது. ஆக்கிரமிக்கக் கூடாது. இந்தச் சித்தாந்தத்தை விளக்குவதாகக்கூட ஆறுமுகச் செவ்வேள் வழிபாடு கால் கொண்டிருக்கலாம். இங்ங்னம் எண்ணுவதில் தவறில்லை. இந்தப் பண்பாடு வரவரக் குறைந்து வருகிறது. இன்று ஒருவரோடு ஒத்துழைத்தல் என்பது சிந்திக்காமல், மறு கருத்து இல்லாமல் இருப்பதுதான் என்று கருதிப் பலர், கூடித்தொழிற்படுகின்ற அமைப்புகளில் கூட தனி மனித நிலை ஏற்றுக் கொள்ளப்பெற்று அசுர சேனைகள் உருவாகி வருகின்றன. இதுவே நமது நாட்டின் இன்றைய நிலை.

21

மிழ் அர்ச்சனை சம்பந்தமாக முதல்வர் பக்தவத் சலத்தை நேரடியாக அணுகும் முயற்சிக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. சென்னையில் இருந்த 'திருக்கோயில்' நரா. முருகவேள் அழைக்கப் பெற்றார். ந. ரா. முருக வேள் மறைமலையடிகளின் மாணாக்கர், சைவத் தமிழறிஞர். இவரும் நாமும் சேர்ந்து தமிழ் அர்ச்சனைப் புத்தகம் ஒன்று தயாரித்து அச்சிட்டோம். அதில் எதிர்ப்பாளர்க்குரிய பதில் இருந்தது. ஒன்றை மறவாமல் நினைவில் கொள்ளவேண்டும்.