பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

171


கருவறை நுழைவு கிடைத்தது. தமிழக வரலாற்றில் இது ஒரு திருப்புமையம். ஆயினும், பூரண வெற்றி கிடைக்கவில்லை. மக்களிடத்தில் வழிபாட்டின் நோக்கம், பயன், அதற்குத் திருமுறைத் தமிழ் துணை செய்யும் பங்கு பற்றிய அறிவு இடம்பெற்றால்தான் தமிழ் வாழும். பொதுவாகத் தமிழ் மக்களிடத்தில் மொழி உணர்வு குறைவு! இன்று வெகு வேகமாக ஆங்கிலத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் தமிழரின் அறிவு வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி என்னாகும்?

தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் சமுதாய மாற்றத்துக்கு உழைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. அவர் தமது வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் தேசபக்தர்; தெய்வ பக்தியுடையவர். இதில் எத்துணையும் ஐயமில்லை. வரலாறு உண்மைகளைப் பேசவேண்டும். ஆனால், பெரியார் தமது வளர்ச்சிப் போக்கில் சமுதாயச் சீர்கேடுகளை, மனிதருக்குள் நிலவும் சாதி வேற்றுமைகளை, தீண்டாமையைப் பார்த்தார்; புழுங்கினார். வழக்கம்போல் இந்து மதம் நெகிழ்ந்து கொடுக்க மறுத்தது. இவையெல்லாம் கடவுளின் ஏற்பாடு-மாற்ற இயலாதது, மாற்றக்கூடாதது' என்று சொல்லத்தொடங்கினர். பெரியாருக்குக் கோபம் வந்து விட்டது. "மனிதருள் சூத்திரனை, தாழ்த்தப்பட்டவனைப் படைத்து இழிவுபடுத்தும் கடவுள் வேண்டாம்!” என்றார். இதுதான் அவர் வந்த வழி! கூர்ந்து நோக்கினால் மாணிக்க வாசகரும் அப்பர் அடிகளும், ராமானுசரும், வள்ளலாரும் வந்த வழி! அவர்கள் சாதிமுறைகளை எதிர்த்தார்கள் என்பது உண்மை! ஆனால், பெரியார் மாதிரி போராடவில்லை. தொடக்க காலத்தில் பெரியாரின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை நம்மால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. ஆதலால், நமது வாழ்க்கையின் தொடக்கத்தில் எதிர்த்தோம். காலப்போக்கில் நடந்தது என்ன? அது யாருக்குத்தான் தெரியாது?