உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அடிகளார். திருமடத்துக் கொடையைத் திருக்கை வழக்கம் என வழங்குதலைச் சுட்டுகிறார். (128)

பரிகலம் என்பது துறவோர் உண்கலம். உணவு ஆக்கும் அட்டிற் சாலைக்கும் அப்பெயர் உண்மையை அடிகளார் சுட்டுகிறார் (94).

தரும சங்கடம் என வழங்கும் வழக்கை அறச் சங்கடம் எனப்பயில வழங்குகிறார் அடிகள் (110, 142, 163).

“சோரம் போகும்பழக்கம் நமக்கு இல்லை என்பதிலும், (105)’ ‘பீடன்று’ என்பது இல்வாழ்க்கைக்கு மட்டுமன்று துறவுறத்திற்கும் பொருந்தும் என்பதிலும் (159) அடிகளர்ர் நனி நாகரிக்கும் சொற்செட்டும் புலப்படுகின்றன.

‘சூடு இருக்கிறதா?’ என்பதும் (78) ‘பழுக்கலாமா?’ (95) என்பதும் சுவையான குறிப்பு மொழிகள்.

இக்கால உழைப்பு விரும்பா இளைஞரை “முறுக்கை ஊறவைத்துச் சாப்பிடும் இளைஞர்கள்” என்பதும், (100) இந்தத் தலைமுறையில் நாம் செய்திருப்பதெல்லாம் கையூட்டைத்தேசியமயமாக்கி இருப்பது தான் (156) என்பதும் அவலம் இழையோடிய எள்ளல் ஆகும்.

கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்ட துண்டோ? என்பதும் (127) வாழைக் காயைக் கனியவைக்கும் அறை என்பதும் (101) ஆகிய பாடலடியையும் பழமொழியையும் தமக்குத்தாமே சூட்டிக் கொள்ளும் அங்கதத் தனித்தன்மையது.

பெருந்தக்க காவியுடை சிறுமைக்கு ஆட்படுத்தப்படும் நினைவு. அடிகளரை எங்கெங்கோ உள்ள காட்சிகளுக்கு இழுத்துச் செல்கின்றது (94).

சலுகை, மேலும் சலுகை எதிர்பார்ப்பை ஊக்கி, உழையாமையை உருவாக்குமே ஒழிய உழைப்பை பாக்காது என்னும் உண்மையை அடிகளார் உணர்ந்தது போல் சலுகை வேட்கையரும், சலுகை ஊக்கியமும் உணர்ந்து கடைப்பிடிக்கும் நாளே தன்மான நாள் என்று நினைக்கத் துண்டுகிறது. (181)

செம்மறியாடு செய்யும் நலத்தை அடிகளார் உரைப்பது கூரிய நோக்கின் விளைவு (360)

கொரட்டி என்பதோர் ஊர்.அவ்வூரில் தீத்திரு விளையாடல் தொடர்ந்து நிகழ்ந்தது. தீ வைத்தவரைக் கண்டு பிடிக்க ஒருவழி கண்டனர். அதனைக் ‘கொரட்டி வழி’ என்று பெயர் சூட்டி அழைக்கலாம் போலும் (218)

திருமுறைக் கல்வியை மாணவரிடம் பரப்ப அடிகளார் கந்தசாமித் தம்பிரானாக இருந்த காலத்து மேற்கொண்ட முயற்சி (140) இந்நாளில் மேற்கொள்ளப்படுதல் கட்டாயத் தேவை போலுள்ளது. திருமடங்களும் திருத் தொண்ட்ர்களும் நோக்கு வைத்தல் ஆக்கம் பெருக்கும்.

அடிகளாரொடு அளவளாவி அணுக்கராக இருந்தவர்க்கெல்லாம் அடிகளார் திருவுருவும் திருவாய்மொழியும் கண்டும் கேட்டும் திளைக்கின்ற பேறு அடிகளார் வரிசை நூல்களைக் கற்பதால் ஏற்படுதல் ஒருதலை இதனை ஓதுங்கால் யாம் பெற்ற பேற்றைக் கற்பார் தாமும் பெறுவாராக.

அடிகளார் பேரன்பில்,
இரா. இளங்குமரன்.