பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மகேசுவர பூஜையை-பந்தியைப் புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு... இதனால், வேளாண்குடி மரபினரின் பொல்லாப்பு ஏற்பட்டது. ஜாதிகளை எதிர்த்துப் போராடிய அனுபவம் உணர்த்துவது என்ன? ஜாதி வேற்றுமை எளிதில் நீங்காது. அது புரையோடிப்போன புண் என்பதேயாம். இன்று அனைத்துத் துறைகளிலும் ஜாதி உணர்வே மேலாதிக்கம் செய்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. வேதனைக்குரிய செய்தி.

அருள்நெறித் திருக்கூட்டமே காலப்போக்கில் ஜாதிகள் இயக்கமாக உருப்பெற்று விடுமோ என்ற ஐயத்தை நெல்லை, காமராஜர் மாவட்டங்கள் பாடம் புகட்டின. பல இடங்களில் இயக்கம் பொதுமை வடிவம் பெறவில்லை. ஒரு ஊரில் அருள்நெறித் திருப்பணி மன்றம் அமைத்து ஒரு பள்ளி தொடங்க எண்ணி, பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப் பெற்றதில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டதாக அந்தக் குழுவை அமைக்க அந்த ஊரார் உடன்பட்டுவரவில்லை. அரிதின் முயன்று செய்து முடிக்கப்பெற்றது. ஆனால், நடைமுறையில் மாற்றம் இல்லை. இது கால் நூற்றாண்டுக்கு முன் நடந்த நிகழ்வு. இப்போது அதைவிட மோசமான நிலை.

இன்று ஜாதி உணர்ச்சி தலையெடுத்து வளர்கிறது. ஜாதி உணர்ச்சி இறுக்கம் அடைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் ஜாதிச் சங்கங்கள்! அரசுகளின் நடைமுறைகள் ஜாதி முறைகளை வலுப்படுத்துகின்றன. வரலாற்றுப் போக்கில் தாழ்ந்தும் பின்னடைந்தும் இருக்கும் சமுதாயத்தில் பள்ளத்தில் கிடப்பவர்களை மேலே கொண்டு வருவது அவசியம். தலையாய கடமையும்கூட. இதற்கெனக் கல்வியில், பணியில் இடம் ஒதுக்கீடு செய்வது தவறன்று. வரவேற்கத் தக்கதும்கூட! ஆனால், இட ஒதுக்கீட்டைப் பள்ளத்தில் கிடப்பது -என்ற ஒரே கொள்கையை வைத்து வழங்க வேண்டும். அதற்காக ஜாதிப் பெயர்களைத் திரும்பத் திரும்ப நினைவுகூர்வது அவசியமா? சலுகைகளை வழங்குவது பள்ளத்தில்