பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏற்பாடு. அன்று பினாங்கில் பெரியார் உள்ளார். மலேயா அரசாங்கம் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இல்லாதபடி கவனமாகப் பார்த்துக் கொண்டது. மலேயாத் தமிழர்கள் சுறுசுறுப்பாக இருந்தனர். போட்டி உணர்ச்சி! ஆதலால், நல்ல வண்ணம் பழகக்கூடிய இருவர் ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் இருந்தும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள இயலவில்லை. ஒரே மேடையில் பேச இயலவில்லை! ஏன்? கருத்து வேற்றுமைகள் பல தீமைகளை உண்டாக்குகின்றன. இது வாழும் முறையன்று. வேற்றுமைகள் நீங்க நெருங்கிச் செல்வதே முறை!

பெரியார் பிறந்த நாள் விழாவை 1956 செப்டம்பரில் திருச்சி பொன்மலையில் திராவிடர் கழகத்தினர் எடுத்தனர். நம்மையும் விழாவுக்கு அழைத்திருந்தனர். ஈரோட்டில் சந்தித்ததற்குப் பின் எங்களுக்கிடையில் நட்பே இருந்தது. மேடையில் இருவரும் ஒன்றாகப் பேசியதில்லை. இந்தச் சூழ்நிலையில் திராவிடர் கழக நண்பர்களின் அழைப்பை ஏற்கத் தயக்கம்! ஏன் தயக்கம்? முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும், பழகி வரும் நட்பு பாதித்துவிடக் கூடாதே என்ற கவலை! கருத்தைவிட நட்பே முக்கியம்! நட்பும் உறவும் இடையூறின்றி வளர்ந்தால்தான் கருத்துப் பரிமாற்றம் தொடர்ந்து நிகழும். என்றாவது ஒரு நாள் கருத்தொருமை தோன்றும்! நாம் நமது வாழ்க்கையில் நன்மை, தீமை, நன்றி, பழி, பாவங்கள் எல்லாவற்றையும் விடப் பழகுதலுக்கும் நட்புக்கும் முதன்மை கொடுப்பது உண்டு. இதனால் பொல்லாப்புகள், இழப்புகள் வரும் ஆனாலும், இதுவே வாழ்க்கை முறை என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனால் என்றாவது ஒரு நாள் நன்றாக முடியும் பகைமை தீது, யாரோடும் பகை கொள்ளலன் என்றான் கம்பன்.

பெரியார் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள நம் இசைவு தரப்பெற்றது. திருச்சி பொன்மலைப்பட்டியில் விழா