பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாடகத்தைப் பார்க்கிறோம். டி. கே. சண்முகம் சகோதரர்களின் நாடகங்களில் மிகவும் சிறந்தது ராஜராஜ சோழன் நாடகம் என்பது நாடறிந்த செய்தி! பெரியார் நாடகத்தை நன்றாக அனுபவித்துப் பார்த்தார். நாடக முடிவில் வாழ்த் துரை! பெரியார் பேசும்போது டி.கே. சண்முகம் சகோதரர்களின் நடிப்புத் திறனை, கலையை மிகவும் பாராட்டிப் பேசினார். ஆயினும், முடிவில் இவ்வளவு அற்புதமான கலைத்திறன் வெளவால்கள் அடையும் கோயிலைப் பற்றியதாக அமைந்துவிட்டமையை கண்டு வருந்துவதாகவும் கூறினார். அடுத்து, நமது வாழ்த்துரை! நாம் பேசும்போது 'நயம்பட', 'பெரியாரும் பெரியாரைச் சார்ந்தவர்களும் கோயிலுக்குள் வராததால்தான் வெளவால்கள் குடிபுகுந்து விட்டன. பெரியார் திருக்கோயிலுக்குள் வந்துவிட்டால் வெளவால்கள் வெளியேறிவிடும்” என்று பேசினோம். மக்களிடம் ஒரே மகிழ்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது.

தமிழ்நாடு அரசு நம் மீது 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்ட வழக்குத் தொடுத்ததைக் கண்டித்து பெரியார் ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டார். வழக்கைத் திரும்பப் பெறாது போனால் போராடுவேன்' என்று அறிவித்தார். நமக்கும் பெரியாருக்கும் இடையே கால்கொண்ட உறவு நாளும் உழுவலன்பாக வளர்ந்து வந்தது.

1967-ம் ஆண்டு! அறிஞர் அண்ணா முதலமைச்சர். பொதுவுடைமைக் கட்சித் தோழர் அமரர் ஜீவானந்தம் மகளுக்கு திருமணம் செய்யவேண்டும். பெரியாரும் நாமும் பொறுப்பேற்றுக் கொண்டு திருச்சியில் திருமணம் நடந்தது. முதலமைச்சர் அறிஞர் அண்ணாவும் வந்திருந்தார். அண்ணாவுக்கு அளவற்ற மகிழ்ச்சி! அண்ணா பேசும் போது, "பொதுவுடைமைக் கட்சித் தோழரின் மகள் திருமணம்! பெரியாரின் தலைமை! அடிகளாரின் வாழ்த்துரை! ஒரே மேடையில் தமிழர்களின் தலைவர்கள் புழுக்கமின்றி இணைந்திருக்கும் இந்த விழா, தமிழினத்துக்கு