உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

அருள்நெறித் தந்தை குரு மகாசந்நிதானம் நூல் தொகுதிகளில் - சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நூல்களின் தொகுப்பில் - இத்தொகுதி சிறப்புமிக்கதாய் விளங்குகின்றது. சமயத்தைப் பற்றிய புதிய பார்வை இன்றையக் காலத்தின் தேவையாக உள்ளது. இன்றையச் சமய உலகம் தம் சிக்கல்களை - பிரச்சினைகளைத் தாமே தீர்வு காண்பதை விட்டு விட்டு அரசிடம் ஒப்படைத்துவிட்டுத் தாம் விலகிக் கொண்டுள்ளது. தாம் ஆற்ற வேண்டிய பணியை அரசிடம் ஒப்படைத்துள்ளது. கள்வர்கள் தோன்றிய சமூகத்தில் சட்டங்களும் சிறைச்சாலைகளும் தவிர்க்க முடியாதவை. சிறைச்சாலைகள் தேவையில்லாத சமூகத்தை உருவாக்குவதுதான் சமய உலகத்தின் கடப்பாடு. கள்வர்கள் தோன்றாத சமூகத்தை உருவாக்குவதுதான் சமய உலகத்தின் கடப்பாடு: நோக்கம். சமநிலைச் சமுதாயத்தைச் சமய உலகத்தின் மூலம் படைக்க வேண்டும் என்பதுதான் அருள்நெறித் தந்தையின் ஆழமான உட்கிடக்கை; கொள்கை; இலட்சியம். அதை இத்தொகுப்பு நிறைவேற்றித் தரும் என்று நம்புகின்றோம். இந்த நூலில் வளர்ந்து வரும் அறிவுலகத்துக்கு ஏற்புடையதாக சடங்குகளே, சமயம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற மக்களைச் சமயம் ஒரு வாழ்வியற்கலை என்று அருள்நெறித் தந்தை நெறிப்படுத்துகின்றார்கள். “அறியாமை என்பது ஒன்றும் தெரியாமை அன்று. ஒன்றை முறை பிறழ அறிந்திருப்பதே அறியாமை. அதாவது நன்மையைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும், உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும், இன்பத்தைத் துன்பமாகவும், துன்பத்தை இன்பமாகவும், நியாயத்தை அநியாயமாகவும், அநியாயத்தை நியாயமாகவும், நீதியை அநீதியாகவும், அநீதியை நீதியாகவும், நிலையானவற்றை நிலையில்லாதனவாகவும், நிலையில்லாத வற்றை நிலையானவையாகவும் கருதுவது. இன்றையச் சூழ்நிலையில் அறியாமை அறிவு என்று கருதப்படுகின்றது” என்ற கருத்து ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையாகும். ஆணவத்தின் இயல்பால் அல்லல்படும் உயிர்க்குலம் தழைக்கத் தீர்வு காண வேண்டும். நான் யார்? என் உள்ளமார்? ஞானங்கள் யார்? என்னை யாரறிவார்? என்ற பாடல் முழுவதுமாகச் சிந்திக்கப்படுகிறது. "நான் யார்? நான் என்பது அஞ்சலக முகவரி அன்று. நான் என்பது வாழ்க்கை வசதிகளும் பதவி அடையாளங்களும் அன்று. நான் என்பது நாமாக மாறவேண்டும். அறியாமை களைந்து பேரறிவிடம் தம்மை இணைத்துக் கொள்வது வழிபாட்டின் பயனாகும். வழிபாடு இறைவனுக் காகவா? உலக உயிர்க்குலம் தம்மைப் போற்றித் துதிக்க வேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கின்றாரா? வழிபாட்டின் பயன் உயிர்க்குலம் தம்மை ஈடேற்றிக் கொள்ளவே” என்ற கருத்து மிகவும் ஏற்புடையதாகும்.

கு.XVI.2