பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

215


திருமணம் செய்து கொள்ளாமலே சமூகப் பணி செய்து வருபவர். கடுமையான உழைப்பாளி. கால் நூற்றாண்டுக்கும் மேலாக தம்முடைய பணிகளில் ஈடுபட்டு வருபவர். காந்தி மிஷன் தலைவர். முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவர் வடசேரி பயண மாளிகையில் நம்மை வரவேற்றார். உடனே அறநிலையத்துறை, காவல் துறை, வருவாய்த் துறைகளைச் சேர்ந்த பல்வேறு அலுவலர்களுடன் ஆலோசனை! அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் எம். பி. பிராணேஷைச் சந்தித்து நிலைமைகளை அறிந்துகொண்டு, செய்ய இருக்கும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் நாம் தனியே கலவரப் பகுதிகளுக்குச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஆயினும், நம்மால் அந்தக் கட்டுப்பாட்டை அனுசரிக்க முடியவில்லை. துணிவின்மைதான் நமது நாட்டுச் சிக்கல்களுக்குப் பெரிதும் காரணம், துணிந்து தொழிற்பட்டால் எல்லாம் நன்றாக நடக்கும்! விஞ்சினால் என்ன மரணம் தானே வரும். என்றாவது ஒருநாள் இறப்பது உறுதி - இதற்கேன் பயம்?

நாகர்கோயில் ஆயர் எம். ஆரோக்கியசாமி மருத்துவ மனையில் இருந்தார். அவரைக் கண்டு அமைதிப் பணிக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொண்டோம். உடல்நல மில்லாமல் மருத்துவமனையில் இருந்தாலும் ஊக்கத்துடன் ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார். மண்டைக்காடு அமைதிப் பணியில் நமக்குக் கிடைத்த தோழமை எம். ஆரோக்கியசாமி. அவர் நம்மீது அளவற்ற பரிவும் பாசமும் காட்டி வருபவர். இப்போது மதுரையில் பேராயராக விளங்குகிறார், அடுத்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எம். அகமத்கான். இவர் சிறந்த பேச்சாளர். தேர்ந்த வழக்கறிஞர். நல்ல பண்பாளர். அமைதிப் பணியில் பூரணமாக ஈடுபட்டவர். வடசேரி பயண மாளிகை நாள்தோறும் மக்கள் கூடும் பணிமனையாக வளர்ந்தது.