பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சென்று திருமுழுக்கு செய்யப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்து சகோதரர்களும் சகோதரிகளும் கலந்துகொண்டனர். மண்டைக்காடு அமைதிப் பணி குறித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 29-3-82-ல் சட்டமன்றத்தில் பாராட்டினார். 'மடாதிபதிகள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டுமே தவிர வேறு வழிகளைப் பின்பற்றக் கூடாது' என்று பாராட்டியது நினைவில் நின்று பணிகளில் ஈடுபடுத்துகிறது. இனி எதிர்வரும் காலத்திலும் ஈடுபடுத்தும்.

மண்டைக்காடு தந்த படிப்பினை என்ன? எந்தக் காரணத்தை முன்னிட்டும் கலகம் செய்யக்கூடாது. கலகம் மனித உயிர்களைக் காவுகொள்கிறது. பொருள் இழப்பு ஏற்படுத்துகிறது. சில பல குடும்பங்களுக்கு ஈடு செய்ய இயலாத துன்பத்தைத் தந்துவிடுகிறது. எந்தவொரு பகுதியிலும் மக்கள் சாதி அடிப்படையிலோ மத அடிப்படையிலோ தனித்து ஒதுங்கி ஒரே கும்பலாக வாழக் கூடாது. பலரும் கூடி வாழ்தல் வேண்டும்.

ஒருவன் தன்னுடைய சமயத்தைப் பற்றி உயர்த்திப் பேசவும் அந்தச் சமயத்தில் நின்றொழுகவும் உரிமை உண்டு. ஆனால், மற்ற மதங்களை ஒப்பு நோக்கியும், தாழ்த்தியும் பேசுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். பொதுவாக, மதம் அனுட்டானத்துக்குரியது. பிரசாரத்துக்கு உரியதல்ல என்பதை நாம் அனைவரும் உணர்தல் வேண்டும். மதம் பிரச்சார வடிவம் கொள்ளுமானால் பூசலே உருவாகும். வளரும். மதம், கடவுளைப் போற்றுவது, மனிதனை வளர்ப்பது. இவையே மதத்தின் கொள்கை, கோட்பாடு என்று கொண்டால் வம்பில்லை. கடவுளே வான் பழித்து இம்மண் புகுந்து மனிதனை ஆட்கொள்கிறான் என்றால் மனிதனைப் பயமுறுத்துவதும் கொல்வதும் எப்படி மதமாக இருக்க முடியும்?