பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திரும்ப எழுந்திருக்கவில்லை; உயிர் பிரிந்துவிட்டது. ஏன் பிரிந்தது? மறுநாள் பாராளுமன்றத்தில் 17-வது திருத்தம் நிறைவேறுமா? விவசாயிகள் உரிமை பெறுவார்களா என்ற கவலை நேருஜியின் உயிரைக் குடித்து விட்டது! அதனால் தானே அவர் தமது உயிலில் தமது உடலை எரித்த சாம்பலை இந்த நாட்டு உழவர்கள் உழும் வயல்களிலே தூவுங்கள் என்று எழுதினார். இதை 'நான் இந்த நாட்டு உழவர்களுக்கு வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. என் சாம்பல்தான் இந்த உழவர்களுக்கு' என்று நினைத்து ஆற்றாமை தாளாமல் எழுதியிருக்க வேண்டும். இன்னமும் நம்முடைய நாட்டில் நிலத்தின் அடிப்படைச் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. இந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களில் பெரும்பாலோர் விவசாயிகளே! என்று கலி தீரும்?

நேருஜி அமரரான அன்று குன்றக்குடியில் காகிதப்பை தயாரிக்கும் தொழிற்சாலை ஆரம்ப விழா. ஆனால், நேருஜி அமரரான துயரம் காரணமாக விழா இல்லாமல் தொழில் தொடங்கப் பெற்றது. அதுதான் இன்று நேருஜி பாலிதீன் கூட்டுறவுத் தொழிற்சாலையாக வளர்ந்து அறுபது பெண்களுக்கு வேலைவாய்ப்புத் தந்திருக்கிறது. நேருஜியின் நினைவுச் சின்னமாக அமைந்தது இந்தத் தொழிற்சாலையே!

ஓர் ஆன்மாவின் பயணம், நெடிய பயணமாகவே நடந்திருக்கிறது; வாழவேண்டிய அளவுக்கு வாழ்ந்திருக்கிறது. ஆனால், பயன் என்ன? இது அடுத்துவரும் தலைமுறை எடுக்கவேண்டிய முடிவு! நமது நிலையில் நிறை இல்லையானாலும் குறையில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அங்கீகாரம் தந்தன. அதிலும் நாம் ஒரு மத நிறுவனத்தைச் சேர்ந்திருந்தும் திராவிடர் கழகம், பகுத்தறிவுக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் அங்கீகாரம் கிடைத்தது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாட்டின் செய்தித்தாள்கள், இதழ்கள் போதிய அளவு ஒத்துழைத்தன. 1955-ம் ஆண்டில் நாம் இந்தோ