பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மார்க்ஸியம் உடலாகவும் காந்தியம் உயிராகவும்
எனக்குத் தோன்றுகின்றன. உடலும் உயிரும்
ஒன்றுபட்டுக் குலவுவதன்றோ வாழ்க்கை?

என்று கூறியிருப்பது நினைவுக்கு வருகிறது.

இந்த நெடிய வாழ்க்கைக்கு இதமான ஆறுதல் தரும் முனிவர் ஒருவர் மெளனமாகப் பின்தொடர்கிறார். அந்த முனிவருடைய இதமான அரவணைப்பு, பரிவு நமக்குப் புத்துயிர்ப்புத் தந்து வழிநடத்துகிறது. அந்த முனிவர் யார்? போற்றுதலுக்குரிய ரத்தினகிரி பாலமுருகனடிமை, அவர் நம் தலைமுறையில் வாழும் அருந்தவ முனிவர்; சித்தர். பொதுப் பணியில் ஆர்வம் காட்டும் அறநெறியண்ணல் லெ. நராயாணன் செட்டியார் நமக்கு வாய்த்த தனித்துணை; புரவலர். வெளிநாடுகளில் நிறைய அன்பர்கள்.

நமக்குக் கனவுகள் கிடையாது; கற்பனைகள் உண்டு. கற்பனைகள் கைகூடுமாக! வாழ்நாள் வீழ்நாள் படவில்லை. இது உறுதி. பல நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டதாலும், பலர் உறவு ஏற்பட்டதாலும் வளர்வதற்குரிய வாயில்கள் ஏற்பட்டுள்ளன. பலருக்கும் அறிமுகமான வாழ்வு! மக்களிடையே இருந்தது ஒரு மனநிறைவு. யாரையும், எவரையும் நாம் அந்நியமாக எண்ணியதில்லை. யாரோடும் பகை கொள்ள நினைத்ததில்லை. இனிமேலும் நினைக்க மாட்டோம். ஆனால், மக்கள் மத்தியில் குண தோஷங்கள் உண்டு என்பார் சிலர் உண்டு. இது அவர்கள் கருத்து. 'ஊரார் தத்தம் மனத்தன. பேச எஞ்ஞான்று கொல்சாவதுவே!' என்ற திருவாசக அடிகளை நினைவதைத் தவிர வேறு வழியில்லை.

எல்லா நூல்களையும்விட சேக்கிழார் அருளிய பெரியபுரணத்தில் ஈடுபாடு அதிகம்! 'அன்பலால் பொருளும் இல்லை; ஐயன்ஐயாற னார்க்கே!', 'தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை!' என்ற சொற்றொடர்களுக்கு - இலக்கணத்துக்கு இலக்கியம் பெரிய புராணம். நாயன்மார்கள்