பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

235


வீட்டில் கொலு வைக்கிறார்கள்; பின் கலைக்கிறார்கள். ஆனாலும், அந்தக் கொலு கலைவது போல் மனித வாழ்க்கையும் கலைந்துவிடும் என்பதை மட்டும் மறந்து போய் விடுகிறார்கள்.

மனிதன் யார்

கார் வைத்திருப்போர் அனைவரும் காரோட்டிகள் அல்லர்; பொறி வைத்திருப்போர் அத்தனை பேரும் பொறியியலாளர் அல்லர். காரை ஓட்டத் தெரிந்தவன் காரோட்டி, பொறியை இயக்கத் தெரிந்தவன் பொறியியலாளன். அதுபோல மனித உடலையும், மனிதனுக்குரிய பிற புற உறுப்புகளையும் பெற்றிருந்தாலும் இன்றியமையாத மனத்தைப் பெற்று, அந்த மனத்தையும் உரிய வழியில் இயக்கத் தெரிந்தவனே மனிதன்.

கூட்டுமாறும்-பொதுநலவாதிகளும்

குப்பையைக் கூட்டித் தள்ளுகிற கூட்டு மாறிலேயே குப்பை இருந்தால் அது எப்படிக் குப்பையைக் கூட்டித் தள்ள முடியும்? அதுபோல, பொதுநலவாதிகளும், சேவையுணர்வுடையோரும் குறைபாடுடையவர்களாக இருந்தால் அவர்கள் எப்படிச் சமுதாயத்தின் குறைபாடுகளைக் களைந்தெறிய முடியும்? எனவே, பொதுநலவாதிகளும், சேவை யுணர்வுடையோரும் தம்மிடத்தே குறைபாடிலில்லாதவர்களாக இருந்தால் அவர்களுடைய முயற்சியில் வெற்றி பெறுவார்கள் - மக்களும் நற்பயன் அடைவார்கள்.

அஞ்சல் தலையும்-சிறுவர்களும்

உறையில் ஒட்ட பசையுள்ள அஞ்சல்தலை தேவை. பசையற்ற அஞ்சல் தலை பயனற்றது; வெறும் பசை மட்டும் கூடப் போதாது-தண்ணீரும் தேவை. இரண்டில் எது இல்லையானாலும் பயனில்லை!