பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதுபோல, இன்றையச் சிறுவர்களாகிய எதிர்காலச் சமுதாயத்தினர் நாட்டுடன், மக்கட் சமுதாயத்துடன் ஒட்டி உறவாடி உயிர்வாழ வீட்டிலும் வெளியிலும் நல்ல சூழ்நிலை வேண்டும். நல்ல சூழ்நிலையே ஒருவனைப் பண்படுத்தும்-பக்குவப்படுத்தும்-பயனுடையவனாக்கும். வீட்டுச் சூழ்நிலை, வெளிச் சூழ்நிலை ஆகிய இரண்டில் ஒன்று குறைபடுமாயினும் அவன் முழுமையாகச் சிறப்புடைய வழியில்லை. அஞ்சலுறை நாடு-அஞ்சல் தலை சிறுவன்-பசை வீட்டுச் சூழ்நிலை. தண்ணீர் வெளிச் சூழ்நிலை.

ஜனநாயக வெற்றி

ஆட்டைப் பலி கொடுப்பதானால்கூட, அதற்கு நல்ல உணவு கொடுத்து வளர்த்துக் கொழுக்க வைத்து அதன் பிறகுதான் பலி கொடுப்பார்கள். அதுபோல, எதிரியைத் தோற்கடித்து வெற்றிபெற வேண்டுமென்றாலும், எதிரியை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டாமா? ஆரோக்கியமான எதிரியிடம் வெற்றி பெற்றால்தான் அது நியாயமான-ஜனநாயக ரீதியான வெற்றியாகும். இல்லையானால், நொண்டியிடம் பெற்ற பெரு வெற்றியாகவே அது அமையும்.

பிஞ்சு-காய்-பழம்

புளியம் பிஞ்சுபோல இருப்பவர்கள் மனித விலங்குகள்; புளியங் காய்போல் இருப்பவர்கள் மனிதர்கள்; புளியம் பழம்போல் இருப்பவர்கள் ஞானிகள்.

புளியம் பிஞ்சு தோற்றமிருக்கும்; ஆனால் பயன்படக்கூடிய ஒன்றும் உள்ளே இருக்காது. அதுபோலப் பலரிடத்து, உருவமிருக்கும். ஆனால், மனித சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய மனிதப் புண்பு இருக்காது.