பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

239


உலை பொங்கி வழிந்து விட்டால், அரிசி நின்று வேகுவதற்கு வேண்டிய தண்ணீர் கீழே வழிந்து ஓடிவிடும். அரிசியும் சரிவர வேகாது. அது மட்டுமல்ல, அப்படிப் பொங்கி வழிவதால், சமையல் செய்வதற்காக உள்ள அடுப்பும், நெருப்பும் அவிந்து போய்விடும். அதுபோல, மனிதர்களும், ஆத்திரம் ஏற்பட்டால் உடனே அதைத் தடுத்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்; அப்படியில்லாமல், ஆத்திரப்பட்டுப் பொங்கினால், செயல் செய்வதற்குரிய ஆற்றல் கெட்டுப் போகும். காரிய சாதனைக்குரிய அடிப்படைச் சூழலும் பாதிக்கப் பட்டுவிடும்.

இரயிலும்-காரும்

இரயிலும் காரும் சென்று கொண்டிருந்தால், காருக்காக இரயிலின் போக்கைத் தடுக்காமல் வழிக்கதவை (Railway Gate) அடைத்துக் காரை நிறுத்தி, இரயிலைப் போக விட்டுப் பின்னரே காருக்கு வழிவிடப் பெறும். ஏனெனில், இரயில் சமுதாயத்தின் சின்னம். கார் தனி மனிதனின் சின்னம். தனி மனித முன்னேற்றத்திற்காகச் சமுதாயத்தின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தலாமா?

பாயசமும்-சமுதாயமும்

பாயசத்தில் மிதப்பது முந்திரிப் பருப்பாக இருந்தால் பாயசம் சுவையாக இருக்கும். மிதப்பது பாச்சையாக இருந்தால் பாயசம் சுவையும், பயனும் இழப்பதோடு, தீமை பயப்பதாகவும் மாறிவிடும். அதுபோல சமுதாயத்தின் மேல் மட்டத்தில் நிற்கும் தலைவர்கள் ஒழுங்கும், நேர்மையும், நாணயமும், நாட்டு நலனில் அக்கறையும் உடையவர்களாக இருந்தால் அவர்களையுடைய சமுதாயம் சிறந்து விளங்கும். இல்லையேல் அது பண்பும் பயனும் அற்றதாகிக் கெட்டொழிந்து போகும்.