பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

243



குழந்தையும்-செடியும்

குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அவர்கள் தம் போக்கில் வளர்வார்களானால், வெட்டி விடப் படாத 'குரோட்டன்ஸ்'களைப் போலக் கரடு முரடாகத்தான் இருப்பார்கள்.

பழச்சாறும்-வழிபாடும்

நாம் பழச்சாறு அருந்துவதனால் மட்டும் உரிய பலனைப் பெற்றுவிட முடியாது. அந்தச் சாற்றைச் செறிக்க வைக்கிற ஆற்றல் நமது உடலுக்கு இருந்து, சாப்பிட்ட சாறு சீரணித்தால்தான் பயன் ஏற்படும். அதுபோல, நாம் வழிபாடு செய்வதால் மட்டுமே உரிய பயனைப் பெற்றுவிட முடியாது. வழிபாட்டின் வழியாகக் கிளர்ந்தெழுகிற உணர்வுகளைப் பாதுகாத்துக் கொண்டு அவற்றை அனுபவிக்கிற இயல்பும் நம் மனத்திற்கு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வழிபாட்டின் பயனை நாம் பெறமுடியும்.

தோண்டுதலும்-சிந்தித்தலும்

நிலத்திலே தோண்டினால் நிலக்கரியும், இரும்பும் இன்ன பிற தாதுப் பொருள்களும் கிடைப்பது போல, நாம் ஆழ்ந்து சிந்தித்தால் நல்லறிவு பெறுவோம்.

பம்பரமும்-நாமும்

பம்பரம் எவ்வளவு வேகமாகச் சுற்றினாலும், அது தொடர்பை விடாமலே சுற்றும். அதுபோல, நாம் நமது வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சமாளிக்க வேண்டி வந்தாலும் கடவுள் உணர்வை விட்டு விலகாமல் வாழ வேண்டும்.