பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

251



மற்ற மனிதர்களைப் போலவே தோன்றுவார்கள். ஆனாலும் அவர்களிடம் ஆன்மநலம் இருக்காது-குறிக்கோள் இருக்காது.

யாக்கையும்-வீணையும்

மானிட வாழ்க்கை அனைவர்க்கும் பொது. அந்த மானிட யாக்கையை இறைவன் தகுதியும் தரமும் பார்த்துப் பிரித்துக் கொடுக்கவில்லை. மிழற்றுகின்றவனின் திறமைக்கு ஏற்ப வீணையின் நாதம் எழுவதுபோல, உள்ளத்தைக் கட்டுப்படுத்தி அதனை இயக்குகின்றவனின் திறமைக்கேற்பக் குறிக்கோள் நிறைவு பெறுகிறது-வாழ்க்கை அமைகிறது.

மனமும்-சமையலறையும்

நிலத்திலே நீருற்று இருப்பது போல மனிதனிடத்திலே நினைப்பூற்று இருக்கிறது. நினைப்பு நல்லதாக இருந்தால் மனிதன் நல்லவனாவான். பொதுவாக, பகல் 12 மணிக்கு நாம் ஒரு நல்ல விருந்து படைக்க வேண்டும் என்று விரும்பினால், காலை 8 மணிக்கே சமையற்கட்டுக்கு நல்ல சரக்குகளைக் கொடுக்க வேண்டும். சமையற்கட்டுக்கு நாற்றம் பிடித்த அரிசியையும், பூச்சி வைத்துக் கெட்டுப்போன கத்திரிக்காயையும் கொடுத்துவிட்டு, 12 மணிக்கு நல்ல சாப்பாடு வேண்டுமென்றால் ஒருபொழுதும் வராது. சமையற்கட்டுக்குக் கொடுக்கப்பெற்ற சரக்குகளுக்கு ஏற்பவே பந்தியிலே விருந்து அமையும். அதுபோல, நமது இதயம் என்ற சமையற்கட்டிலே ஏற்றப் பெற்ற எண்ணம் என்ற சரக்குகளுக்கு ஏற்பத்தான் சமுதாய வாழ்க்கை அமையும்.

பாத்திரமும்-மனமும்

ஒரு பாத்திரத்தில் எதையாவது ஒன்றை வைத்துக் கொண்டு இன்னொன்றை அதன் மேல் ஊற்ற முடியாது. அதில் இருப்பதை அப்புறப்படுத்தி விட்டுத்தான் இன்னொன்றை ஊற்றவேண்டும். மனித உள்ளத்தில் வஞ்ச