பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அரைக் கீரையும்-ஆற்றலரும்

அரைக்கீரை கிள்ளக் கிள்ளத் துளிர்த்து வளர்வது போல ஆற்றல் நிறைந்த மனிதன் துன்பத்தால் தாக்கப் பெறத் தாக்கப் பெற அவன் ஊக்கமும் உற்சாகமும் பெறுகின்றான். கோழைகள் பகைவரால் அழிக்கப்படுகிறார்கள்.

கோயிலும்-பஞ்சாயத்தும்

திருக்கோயிலுக்குள் நாம் நுழையும் போது காற் செருப்பை வெளியே கழற்றி வைத்து விட்டுப் போவது போல, பஞ்சாயத்துக்குள் நுழைபவர்கள் தனி மனித உணர்வு, சாதிய உணர்வு ஆகியவற்றையெல்லாம் வெளியிலேயே விட்டு விட்டுப் போக வேண்டும்.

புகையும்-தீமையும்

உத்திரத்திலோ சுவரிலோ புகை படிவது போலவே மனித மனத்தில் தீமைகள் படிகின்றன. புகை கொஞ்சம் கொஞ்சமாகவே படியும். தீமையும் அப்படித்தான்!

வீடும்-சமுதாயமும்

இன்றையச் சமுதாய வாழ்க்கை கலைந்த வீடுபோல் காட்சியளிக்கிறது. கலைந்த வீட்டில் குடியிருப்பது என்பது எப்படி முடியாதோ அதுபோலவே, அன்பிலும் உறவிலும் வாழவேண்டிய சமுதாயம் தம்முள் கலைந்து விடுமாயின் மனித சமுதாயம் வாழமுடியாது!

மழைநீரும்-மனித உணர்ச்சியும்

மழைபெய்து புரண்டுவரும் தண்ணிரைக் கால்வாய்களின் வழிக்கொணர்ந்து ஏரிகளில் தேக்கிக் கழனிகளுக்குப் பாய்ச்சும் போதுதான் உரிய பயன் ஏற்படுகிறது. அதுபோல, மனிதனிடம் தோன்றும் இயல்பான உணர்ச்சிகளை அறிவுக் கால்வாய்கள் வழிச்செலுத்தி அனுபவம் என்ற ஏரியில்