பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஊறுகாயும்-சமயமும்

நாம் பல்வேறு வகையான உணவுகளையும் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் ஊறுகாயைச் சாப்பிட்டால் நாம் சாப்பிட்ட உணவனைத்தும் செரித்து ஊறுகாயின் மணம் மட்டும் மேலெழுந்து நிற்பது போல, மதமும், கடவுள் நம்பிக்கையும் நம்மிடமுள்ள வஞ்சம், பொய், களவு, சூது, சினம் ஆகியவற்றைச் சீரணிக்கச் செய்து அன்பையும் சகோதரத்து வத்தையும் மேலெழுந்து நிற்கச் செய்யும்.

ரோஜாவும்-மனிதனும்

ரோஜா மலர் மணத்தால் வண்ணத்தால் பலருக்கும் விருந்தளிக்கிறது. அதுபோல, மனிதனும் காட்சியாலும் செயலாலும் மற்றவர்களுக்கு இன்பமளிக்க வேண்டும்; அது மனிதனின் கடமை.

ஒலிப்பதிவும்-உயிரும்

ஒலிப்பதிவு நாடாவில் (Tape Recorder) நாம் ஒலிப்பதிவு செய்வதையே மீண்டும் கேட்கிறோம். புதிதாகக் கேட்க முடிவதில்லை. அப்படிப் புதியது கேட்க விரும்புவோமானால் அழித்துவிட்டுப் புதுப்பதிவு செய்ய வேண்டும். அதுபோல, நம் உயிரின் ஒலிப்பெட்டியில் நாம் எண்ணி யனவும் சிந்தித்தனவுமே பதிகின்றன. அவையே நம்மை நிழல் போலத் தொடர்கின்றன.

இரும்பும்-மனிதனும்

இரும்பை நெருப்பில் போட்டுச் சூடுண்டாக்கிச் சம்மட்டியால் அடித்தால்தான். அது வில்லாக வளையும் என்பதுபோல, மனிதனை நோன்பால் வருத்திப் பக்குவப் படுத்தினால்தான் அவன் பயன்படும் மனிதனாவான்.