பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாகிய எறும்பை விலக்குவான். அதுபோல மனித உயிர் களைப் பாதுகாத்துப் பயன்பெறுதல், ஞான உழவு செய்கின்ற ஞான ஏருழவனாக இருக்கின்ற இறைவன் உயிர்களைப் பாதுகாத்துப் பயன்கொள்ளக் கடமைப்பட்டவன். மனித உயிர்களுக்குப் பகையாகிய புலன் அரிப்பைத் தடுத்துப் பாதுகாக்க வேண்டியவன் அவன். புலன் வாழ்க்கை வேறு; புலன் அரிப்பு வேறு. சமய வாழ்க்கை புலன் வாழ்க்கையை மறுக்கவில்லை; புலன் அரிப்பையே மறுக்கிறது. அதனாலேயே அரித்தல்' என்ற சொல் வழக்கைக் கையாளுகிறார் மாணிக்கவாசகர்.

நாங்கூழ் புழு எறும்புகளிடையே அகப்பட்டால் அரித்துத் தின்னப்பெறும்; பயன்படும் புழுவாயினும் அழிக்கப்பெறும். மனித உயிர் அன்பு, அறிவு என்ற எலும்புகளைப் பெறாவிடின் புலன்களால் அரிக்கப் பெறும் எறும்புகளின் அரிப்பிலிருந்து நாங்கூழ் புழுவை விவசாயிகள் காப்பாற்றிப் பயன் அடைவது போல, இறைவன் உயிர்களைப் புலன்களின் அரிப்பிலிருந்து பாதுகாத்து பயன் கொள்ளுதல் வேண்டுமென்ற கருத்தை மாணிக்கவாசகர் வலியுறுத்துகிறார். அந்த அழகிய பாடல் இதோ:

"எறும்பிடை நாங்க ழெனப்புல
னாலரிப் புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண்
டாய்வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேயுணர்
வுற்றவர் உம்பரும்பர்;
பெறும்பத மேயடி யார்பெய
ராத பெருமையனே!”

மரப்பொந்தும் மனப்பொந்தும்

சாலை ஓரத்தில் வழிச் செல்வோர் நலனுக்காக நிழல் தரு மரங்கள் வைத்து வளர்க்கப் பெற்றுள்ளன. அம்மரங்