பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

281


களிற் சிலவற்றில் கவனக் குறைவின் காரணமாகவும், வலிமையான உள்ளிடின்மையின் காரணமாகவும் பொந்துக்ள் விழுவதுண்டு. வழிப்போக்கர்களில் பொறுப்புணராத மனிதர்கள், நாம் புகைத்ததுபோக எஞ்சிய துண்டுப் பீடியை அந்தப் பொந்தில் போட்டுச் சுற்றிலும் கிடக்கும் சருகுகளையும் அள்ளிப் போடுவார்கள். மற்றவர்கள் கட்புலனுக்கு வராத இடத்தில் துண்டு பீடியில் இருந்த தீ, உள்ளூரப் புகைந்து எரிந்து அம்மரம் அழியக் கூடியது-அல்லது முறிந்து விழக்கூடிய நிலையில்தான் தீ வெளிப்படும். அந்த நிலையில் அந்த மரத்தை என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது. இது அன்றாடம் சாதாரணமாக நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி. இந்த எளிய காட்சி அரிய பொருளை விளக்கும் உவமையாகத் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது.

உயிர், இறவாத இன்ப அன்பில் திளைத்து இன்புற வேண்டும்-நலமுற வேண்டும் என்ற திருவருள் நோக்கத்தினாலேயே உயிருக்குப் பொறி புலன்களோடு கூடிய வாழ்க்கை கிடைத்தது. ஆனாலும், கவனக்குறைவின் காரணமாகவும் கருத்து இன்மையாலும் உயிர் இன்புறு தலுக்குப் பதிலாக ஆராத் துயரில் ஆழ்கிறது. இதற்குக் காரணம் பொறிபுலன்களோடு கூடிய வாழ்வியல் நடத்தும் உயிரிடத்தில் ஆசையென்ற பொந்து விழுந்து விடுகிறது "ஆசை மோசம்” என்பது அனுபவ மொழி

"ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்”

என்கிறது திருமந்திரம். தமிழ்மறை தந்த திருவள்ளுவரும் "மேன்மேலும் துன்பச் சார்புடைய பிறப்பை விளைக்கும் வித்து ஆசையே” என்கின்றார். மாணிக்கவாசகரும் "அவா வெள்ளக் கள்வனேனை” என்று குறிப்பிடுகின்றார். ஆதலால், உயிரியல் நல்வாழ்க்கையைக் கெடுக்கும் பொந்து ஆசை யேயாகும். இங்கு ஆசை என்று குறிப்பிடும்பொழுது,


கு.XVI.19