பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவனாலேயே வழங்கியருளப் பெறுகின்ற பொன், பொருள், போகத்தை விரும்புவதா கூடாதா என்ற வினா எழும். தேவையை விரும்புதல் ஆசையென்று சொல்லப் பெறுவதில்லை. மாணிக்கவாசகரும், "வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ" என்று குறிப் பிடுவது சிந்தித்து உணரத்தக்கது. தகுதியில்லாத ஒன்றினை விரும்புதல் ஆசை. அதுமட்டுமல்ல, சாதனத்தையே சாத்திய மாகக் கருதிக் காமுறுதலும் ஆசையே. உதாரணமாகப் பொருள்களைப் பெற்றுத் துய்த்து வாழப் பொன் தேவை. அந்த அளவிற்குப் பொன்னை விரும்புதல் பிழையன்று. அளவிற்கு மேலாகத் துய்க்கவும், அத்தோடு தானும் துய்க்காமல் பிறரையும் துய்க்கச் செய்யாமல் பொன் காக்கும் பூதமாக வாழ்தலும் ஆசையின் பாற்பட்ட வாழ்க்கை. கடுங்கோடை-மண் சுடுகிறது-அந்த நேரத்தில் காலில் அணிந்து கொள்ளும் செருப்பைப் பெற்ற ஒருவன், செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு சுடுமணலில் நடந்து துயர்ப்படுவானானால் அது இரங்கத்தக்கதல்லவா?. அவனுடைய உணர்வில் செருப்பின் பயனைவிட செருப்பு அதிகப்படியான இடத்தைப் பெற்றுவிடுகிறது. இத்தகு வாழ்க்கை ஆசைக்கோர் எடுத்துக்காட்டு,

இத்தகைய ஆசையென்ற பொந்தில் துய்த்தல் என்ற நெருப்பை யாராவது இட்டுவிட்டால் அந்தத் தீ உள்ளுக் குள்ளேயே புகைந்து எரிகிறது. புலன்கள், வேட்கை என்ற வெப்பத்தால் புகைந்து எரிந்து வெதும்புகின்றன. இந்த நிலையில் திருவருளே உயிரைக் காப்பாற்ற வேண்டும்! அதுவும் உடனடியாகக் காப்பாற்ற வேண்டும். வருந்தும் போது காப்பாற்றுதலே முடியும். அழிந்து போன பிறகு காப்பாற்றுதல் என்பது இயலாத ஒன்று. ஆதலால், ஆசை என்ற பொந்து ஏற்பட்டு அதில் துய்த்தல் என்ற தீ பற்றி எரிவதன் மூலம் தான் அழிந்துபடாமல் காப்பாற்று என்று விண்ணப்பிக்கின்றார் மாணிக்கவாசகர். இத்தகைய கருத்தை விளக்கும் பாடல் இதோ: