பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொஞ்சிக் குலாவுவர். இத்தனை அரிய வாய்ப்புக்களையும் இழக்கும், வளர்ப்பார் ஒருவர் இன்றித் தானே வளர்ந்து வாழும் ஊர் நாய். ஊர் நாய் நற்சோறு உண்ண முடியாது. காரணம், போடுவார் இல்லை. அதனால் இழிந்த கழிவுப் பொருட்களை உண்டு வாழும் ஈனநிலை ஏற்படுகிறது. ஆன்மாவும் தக்க அறிவு தந்து நல்லாற்றுப் படுத்தும் தலைவன் இன்மையின் காரணத்தால் மும்மலத்திற்கிடந்து உழலும், மும்மல வழிப்பட்ட உணர்வுகளைப் புசிக்கும்.

தக்க ஒருவரின் பாதுகாப்பின்மையால்தான் ஊர் நாயை எல்லோரும் அடிப்பர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்க நாதியில்லை. சட்டப்படிகூட கேட்க முடியாது. அது போல உற்றுழி உதவி உறுதுணையாக நின்று வாழ்வளிக்கும் இறைவனுடைய பாதுகாப்பில் அமர்ந்தால் அவர்களை யாரும் தாக்க முடியாது; தாக்கினால் தலைவன்-இறைவன் பாதுகாப்பான். "நமன் தமரும் இவன் தமர்” என்று தீண்ட அஞ்சி ஒடுவர். மார்க்கண்டேயர் வரலாறு இதற்குத் தக்க சான்று.

ஊர் நாய் ஊர் சுற்றித் திரிதலின் காரணமாக நிலையான உணர்வும், நினைப்பும், வாழ்க்கையும் அதற்கு இருக்காது. அதுபோல, இறைவனின் திருவடிச் சிந்தனையில் நிலையான நினைப்பில்லாதவர்கள் உலகியலில் நினைப்பு மாறி, நிலை மாறி சுற்றித் திரிகுவர்.

ஊர் நாய்க்கு முறையாகச் சோறிடுவோர் இல்லாமையின் காரணத்தாலும், சில பொழுது உண்டும் பல பொழுது உண்ணாமலும் வாழ்வதாலும் இளைத்துக் கிடக்கும். குளிப்பாட்டிச் சீராட்டுவார் இல்லாத காரணத்தாலும் கண்ட கண்ட இடத்தில் படுத்துப் புரள்வதின் காரணத்தாலும் வங்கு பிடித்துக் கிடக்கும். அது போலவே, இறைவனின் திருவருள் நினைவு இல்லார் அந்நினைவு