பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விட்டோம் என்று பாடவேண்டும். ஆம்! இன்றைக்கு மக்கள் அப்படிப் பாடாததற்குக் காரணம் என்ன? அவர்கள் அனுபவிப்பது ஆனந்த சுதந்திரமா? இல்லை. எத்தனையோ நெருக்கடிகள்! எத்தனையோ தொல்லைகள்! அடிமைத் தனங்கள்! பயந்தாங்கொள்ளித் தனங்கள்! பயமுறுத்தல்கள்! இவைகளுக்கிடையே இந்தச் சமுதாயம் மெள்ள ஊர்ந்து கொண்டிருக்கிறது.

இப்பொழுது வானொலி நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது, இரண்டு மூன்று காட்சிகள்! ஓர் இடத்தில் போராட்ட உண்ணாவிரதம்! இன்னொரு புறத்தில் மகிழ்வுந்தில் கூக்குரலிட்டுக் கொண்டு, கோஷம் எழுப்பிக் கொண்டு இந்த நாட்டு மகளிர் செல்லுகிறார்கள். மகளிர் எழுப்பிய முழக்கொலி "பெண்களை விடுதலை செய்! பெண்களுக்குச் சுதந்திரம்" நாடு விடுதலை பெற்று 47 ஆண்டுகள் கடந்த பிறகும் "பெண்களுக்கு விடுதலை இல்லை" என்று தெருவில் நின்று முழக்கொலி செய்கிறார்கள் என்றால் ஆனந்த சுதந்திரம் ஆக முடியுமா?

சுதந்திர தினவிழா என்பது கொடியேற்றுதல் மட்டுமல்ல. ஒரு கணக்காய்வு செய்யவேண்டும். நேற்று என்ன நடந்தது? இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாளை என்ன நடக்கும்? நாளை என்ன நடக்குமாறு செய்ய வேண்டும்? இந்தக் கணக்காய்வு செய்யாது போனால் சுதந்திர தினவிழாவுக்கு என்ன பொருள்? நேற்றிலிருந்து இன்று பிறக்கிறது. இன்றிலிருந்து நாளை பிறக்கிறது.

இன்றைக்கு நமது இளைய சமூகத்தைப் பற்றி, இளைய பாரதத்தைப் பற்றி, அடுத்து வருகின்ற தலைமுறையினரைப் பற்றி, நமக்குக் கவலை இருக்கிறதா? அதற்குரிய திட்டங்களைத் தீட்டுகிறோமா? அப்படியே தீட்டினாலும், அந்தத் திட்டத்தினுடைய பயன்கள் குழந்தைகளுக்குப் போய்ச் சேருகிறதா? இவையெல்லாம் சிந்திக்க வேண்டியன, எங்கே