பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றார் திருவள்ளுவர். இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம் நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்! நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்ககள்! அந்த திசைநோக்கி நடக்க வேண்டும்.

நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம் "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” என்று அன்று ஆண்டாள் நாச்சியார் பாடினார். இன்று குடம் நிறையக் கறக்கும் மாடுகளை நமது நாட்டில் பஞ்சாபில்தான் பார்க்க முடிகிறது. அடுத்து குஜராத்தில்தான் பார்க்க முடிகிறது. நாடு முழுதும் அத்தகைய கால்நடைகள் வளர வேண்டும்.

அறிவியல், நாட்டுக்கு இன்றி அமையாதது. அறிவியலும், ஆன்மிகமும் முரண்பட்டதல்ல. ஆன்மிகமும் ஒரு அறிவியல்தான். அறிவியல் என்பது வளரும் உலகத்தை, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை, நம்மைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகத்தை, நமக்குப் பயன்படுத்திக் கொள்வது, வளர்ப்பது, வாழ்வது, என்பதுதான். நம்முடைய பொருளாதாரம் செழிப்பாக இருக்கவேண்டும். கடன் வாங்கிய காசு கையில் புரளலாம். ஆனால் சொந்தமாகாது. நம்முடைய நாட்டினுடைய சொந்த மூலாதார வளங்கள் பெருகி ஆக வேண்டும். நம்முடைய மூலதனம் பெருக வேண்டும். பன்னாட்டு மூலதனங்களைவிட, சொந்த மூலதனம்தான் தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

எல்லோரும்தான் பிறக்கிறார்கள், எல்லோருக்கும் ஒரே ஒரு முறைதான் பிறப்பு. ஆதலால் மீண்டும் பிறக்கப் போவது நிச்சயமில்லை. ஆதலால், இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அந்த இலட்சியம் எதுவாக இருக்க வேண்டும்? நம்முடைய