பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாட்டை நல்லதிசைக்கு அழைத்துச் செல்லமுடியும். எங்கே போகவேண்டுமோ அங்கே போகமுடியும். அந்தத் தடம் அதோ தெரிகிறது! அந்தத் தடத்தைப் பிடிப்போம்! தடம் மாறாமல் நடந்துபோவோம்! வருக! வருக! -

2. கல்விச் சிந்தனைகள்
(20–3–94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

உயிர்த் தொகுதி பரிணாம வளர்ச்சியில் புல், புழு, விலங்கு. என்று வளர்ந்து கடைசியாக ஐந்து அறிவினாலாகிய விலங்கினின்றும் ஆறறிவுடைய மனிதன் பரிணமித்தான். மனிதன், மிருகமும் அல்லன்; முழு மனிதனுமல்லன். மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி மனிதனாக வாழ்ந்து அமர நிலை எய்த வேண்டும். இதுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சி. குறிக்கோள்! ஆனால் எல்லா மனிதருமே விலங்குத் தன்மையிலிருந்து அறவே விலகியதில்லை. முழு மனிதனாகவும் வாழ்ந்ததில்லை; தெய்வமாகத் திகழ்ந்தது மில்லை.

இம்மூன்றின் கலவையாகவே கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். கோடியில் ஒருவர் விலங்கியல் தன்மையைப் பூரணமாக வெற்றி கொண்டு, மனிதராக மாமனிதராக விளங்கி, இந்த மண்ணிலேயே அமரர் சிறப்பினைப் பெற்று வாழ்ந்துள்ளனர்.

இன்று நமது நிலை என்ன? நாம் விலங்கினத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் தடத்தில் செல்கிறோமா? மனிதத் தன்மையுடன் வாழ்கிறோமா? இங்கேயே அமரர் சிறப்புக் காணும் தடத்தில் செல்கிறோமா? சிந்தனை செய்யுங்கள்! இன்றைய மனிதன் உணர்ச்சி வசப்படுகிறான். அவன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விலங்குகளிலும் மோசமாகி விடுகிறான்; கலகம் செய்கிறான்; கொலை செய்கிறான்;