பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்த்தேனே!” என்றார். உடம்பை வளர்த்தல் என்றால், எடை கூடுதலாக வளர்த்தல் என்பதல்ல. உடம்பின் பயன்பாட்டு ஆற்றலை வளர்த்தல்!

இன்று உடல் நலத்திற்கு எதிரான செயற்பாடுகளே மிகுதி. சமையல் தோன்றிய பிறகு மனிதன் உடலுக்கு உகந்ததை உடல் நலத்திற்கு ஏற்றதை உண்ணாமல், சுவைக்காக உண்ணத் தலைப்பட்டு விட்டான்! போதும் போதாததற்குப் புகையிலையரக்கன் பலவகைப் புனைவுகளில் மனிதனை அழித்துக்கொண்டு வருகிறான்.

காற்று சுவாசிப்பதற்காக அமைந்த மூக்கினை வாணக் குழியில் வெடி மருந்து திணிப்பதுபோல மூக்குப் பொடியைத் திணிக்கிறான். அடுப்பில் புகை இருத்தல் போல இன்று பலருடைய வாயில் புகை! புகை பிடித்தல், சாராயம் குடித்தல் இன்னோரன்ன தீமைகள் நாளும் பலரின் உடல் நலத்தைக் கெடுத்து வருவதோடு அவர்களை மனிதப் பண்பிலிருந்து தடம் மாற்றி விலங்கியல் நிலைக்கு அழைத்துப் போகின்றன. இவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள்!

மனிதன் வரலாற்றின் உறுப்பு. மனிதன் வரலாற்றின் கருப்பொருள். மனிதன் இந்த உலகைப் பயன்படுத்தும் வகையில் அமைப்பவன். மனிதன் படைப்பாளி! மனிதன் காலந்தோறும் இப்புவிக் கோளின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பவன். மனிதனை அளவு கோலாகக் கொண்டே இந்த உலகம் மதிப்பிடப்படுகிறது. மனிதப் படைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற, மனிதனுக்குக் கருவியாக அமைவது அறிவு!

"அறிவுடையார் எல்லாம் உடையார்”

என்பது திருக்குறள்.

மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டு, அறிவைத் தேடும் முயற்சி நடைபெற்று வருகிறது. மனித குலத்தினர்