பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

309


அனைவரும் அறிவு பெற்று விளங்கவேண்டும் என்பது நியதி. இத்திசையில் மனிதகுலம் எடுத்த முயற்சிகள் பலப் பல. ஆயினும் அறிவு பெற்றோர் கோடியில் ஒருவரே!

இன்று நாம் அறிவுடைமை பற்றி, கொண்டிருக்கிற கருத்து, பிழையானது, தகவல்கள் நிறைய வைத்திருப்பவர்கள், நிறைய படித்தவர்கள், பட்டம் பெற்றிருப்பவர்கள், இவர்கள் எல்லாம் அறிஞர்கள் என்று பிழையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். இவர்களில் அறிஞர்கள் இருக்கலாம். தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் திருக்குறள் கூறும் அறிவுடைமை எது? மனிதனை - மனித குலத்தைத் துன்பத்திலிருந்து காப்பதே அறிவு. இன்று நமது வாழ்க்கையில், துறை தோறும் துன்பந்தானே சூழ்ந்திருக்கிறது. மனிதரை மனிதர் கொன்று அழிக்கும் ஆற்றல் மிக்க கொலைக் கருவிகளை மனிதன் படைத்திருக்கிறான். அப்படியானால் நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்?

இன்றைய உலகம் அறிவியல் உலகம் என்கிறார்கள். கூர்ந்து நோக்கின், உயர்தர அறிவியல் வளரவில்லை. அருவருக்கத்தக்க நிர்வாணமான சுயநலம் வளர்ந்து வருகிறது. வீட்டிலிருந்து, உலகத்தின் பெரு வீதிகள் வரை எங்கும் பண மதிப்பீட்டுச் சமுதாய அமைப்பு: ஆதிக்கப் போட்டிகள்! மற்றவர் துன்பம் பொருத பண்பே அறிவுடைமை என்று கூறுகின்றது திருக்குறள்.

"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை”

என்பது திருக்குறள். இத்தகு அறிவைப் பெறும் கல்வி வழங்கப் பெறுகிறதா? இன்று நமது கல்வி உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது? பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்வி உலகம் வெற்றி பெற்றிருக்கிறது.