பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாணவர் சற்று விடை தரத் தாமதித்தால் அடுத்து - Next - சொல்லி விடுகிறார் ஆசிரியர். சில அவசரமுடைய ஆசிரியர்கள் விடையைத் தாமே சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். இது தவறு. வினாவுக்குரிய விடைகளை மாணவர்களே அவர்களின் அறிவுப்புலனால் தேட வேண்டும். தேவையானால் ஆசிரியர் துணை வினாக்களைத் தொடுத்து, மாணவர்களிடத்தில் விடை காணும் முயற்சியைத் தூண்டலாம். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியர் விடை கூறக்கூடாது.

ஆனால், இன்று நடப்பு, வினா-விடைகளை எழுதிப் போட்டு மனப்பாடம் செய்வதுதான்! இதனால், சிந்தனைத் திறனும், புதியன காணும் முனைப்பும் வளரவில்லை! கல்வி உலகு, தேர்வு மட்டுமே என்ற குறுகிய குறிக்கோளில் சென்று கொண்டிருக்கிறது. திசையை விரிவுபடுத்திக் கொண்டு, சிந்தனையாளர்களை, படைப்பாளர்களை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்லவேண்டும். படிப்பாளிகளை உருவாக்கும் நிலையிலிருந்து படைப்பாளிகளை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்லவேண்டும்.

கல்விக்கு இதயம் தேவை. சோவியத் கல்வியாளன் சுகோம்லின்ஸ்கி "குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்" என்று எழுதினான். கல்வி, மூளையோடு மட்டுமோ, கற்கும் நூல்களோடு மட்டுமோ சம்பந்தமுடையதன்று. இதயத்தோடும் சம்பந்தமுடையது. கல்வி கற்பிக்கவும், கல்வி கற்கவும், அதற்கென ஒரு சிறந்த பாங்கு தேவை.

கற்பிக்கும் ஆசிரியருக்குச் சிறந்த உணர்வு நிறைந்த இதயம் தேவை. கற்கும் மாணவருக்கும் ஆசிரியரைப் பூரணமாக - ஆசிரியரின் மனத்தைக் கூடப் புரிந்துகொள்ளும் உள்ளம் வேண்டும். அப்போதுதான் கற்பிக்கும் பணியும், கற்கும் பணியும் அர்த்தமுள்ளது ஆகும்.

இத்தகு கல்விச் சூழலுக்கு உரியமொழி தாய்மொழியே என்ற கருத்திற்கு இரண்டாவது கருத்து இருக்கமுடியாது.