பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போக்கினைத் தவிர்த்து, அடுத்த தலைமுறையினருக்குப் புதிய உலகைக் காட்டவேண்டும். நம்முடைய இளைஞர்கள் சிறந்த கல்வியையும், ஞானத்தையும் பெற்று, பொறுமை, உறுதி, முயற்சி, இவற்றோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணி செய்வதில் நம்பிக்கை வைக்கக்கூடிய கல்வியே இன்றையத் தேவை. இதுவே நாம் செல்லவேண்டிய திசை..!

கல்வி உலகம் இன்றைக்கு இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. மேலும் தெளிவாகச் சொல்லப் போனால் கல்வியில் இரண்டு ஜாதிமுறை தோன்றியிருப்பது போலத் தெரிகிறது. அதாவது கிராமப்புறக்கல்வி, நகர்ப்புறக்கல்வி என்று குறிப்பிடுகின்றோம். கிராமப்புறக் கல்விக்கும், நகர்ப் புறக் கல்விக்குமுள்ள இடைவெளி மிகவும் அதிகம் என்பதை வருத்தத்தோடு குறிப்பிட வேண்டி இருக்கிறது.

நகர்ப்புறத்து இளைஞர்கள், மாணவர்கள், தரமானக் கல்வி பெறமுடிகிறது. அவர்களது அறிவுப் புலன்களுக்கு நிறைய விருந்து கிடைக்கிறது. அதனால், தரமும் திறமையும் உடைய இளைஞர்கள், நகர்ப்புறத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் கிராமப்புறத்தில் அது இல்லை. கிராமப்புற பள்ளிக் கூடங்கள் எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லாத கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. சோதனைக் கருவிகள் கிடைப்பதில்லை. நல்ல நூலகம் அமைவது இல்லை. அவர்களுடைய செவிப்புலனுக்கு நிறைய விருந்துகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, கிராமப் புறக் கல்வியில், தரம் குறைந்திருக்கிறது என்பது இரண்டு கருத்துகளுக்கு இடமில்லாத ஒரு பொதுச் செய்தி. கிராமப்புறக் கல்வியை மேம்படுத்துவதில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு இப்படி ஒரு ஆலோசனைக் கூடச் சொல்ல முடிகிறது. கிராமப்புறத்தில் திருக்கோயில்கள் உண்டு.