பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடந்ததும் நடக்க வேண்டியதும்

23


அவர்களுக்கு நம்மீது ஈடுபாடு. அவர் உரிம ஆவணத் தள்ளுதலுக்கு இசைவு தரவில்லை. மதுரையிலிருந்து குன்றக்குடிக்குத் திரும்பும்பொழுது திருப்புத்துாரில் அப்பொழுது ஆதீன வழக்கறிஞராக இருந்த திரு. அ. இராமச்சந்திரன் பிள்ளை அவர்களிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். அவர்களும் இசைவு தரவில்லை.

இதற்கிடையில் நாம் திருவண்ணாமலை சென்று விட்டுக் காரைக்குடிப் புகைவண்டி நிலையத்தில் இறங்கினோம். ஒரேஒரு எழுத்தர்மட்டும் அங்கு வந்திருந்தார். அவரும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வந்திருந்தார். விவரங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. வழக்கம்போல நாம் அமைதியாகக் குன்றக்குடிக்கு வந்தோம். பூசைமடத்தில் வழிபாடு செய்து கொண்டு அமைதி காத்தோம். சிலநாள்கள் ஓடின. ஆனால், திருவருள் திருமகா சந்நிதானம் அவர்கள் மட்டும் நம்மோடு பேசுவதில்லை. மாலையில் போய் விசிறிக் கொண்டு நிற்போம். அப்போதும் பேசுவதில்லை. இப்படிச் சிலநாட்கள் ஓடின. ஒருநாள் மாலைநேரத்தில் துணிவை வரவழைத்துக் கொண்டு "என்ன குற்றம் செய்தேன்" என்று மகாசந்நிதானத்தில் விண்ணப்பித்துக் கொண்டோம். உடன் திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களிடத்திலிருக்கிற அதிகாரத்தை நாம் எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாகச் சற்று அழுத்தக்குரலில் சொன்னார்கள். உடன் நாம் வீழ்ந்து வணங்கி "அப்படி ஒன்றும் எண்ணமில்லை, சொன்னவர்களை விசாரிக்க வேண்டும்" என்று விண்ணப்பித்தோம், கரவிலாத் திருவுள்ளமுடைய அவர்கள் சிலரை அழைத்து விசாரித்தார்கள். சாட்சியங்கள் கேட்டார்கள். விசாரணையின் முடிவு "நாம் குற்றமிலோம்” என்றாயிற்று. மீண்டும் திருவருள் திருமகா சந்நிதானம் அவர்களின் அரவணைப்பில் மகிழ முடிந்தது. இந்தத் தகவல்களை நாம் தருமபுரத்திற்குத் தெரிவிக்கவில்லை. ஆச்சாரியன் திருவுள்ளம் எப்பரிசாயினும் மாணாக்கன் அப்பரிசே ஏற்கவேண்டும் என்பது விதிமுறை.