பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படுத்தப் பெறும், புதியவழியில் செல்வோம்! மாற்றமும் வளர்ச்சியும் காண்போம்!

5. பொருளாதாரச் சிந்தனைகள்
(10-9-1994 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

இந்த வாரச் சிந்தனை-பொருளாதாரத்தில் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது. நாம் போகும் திசை சரியானது தானா? அல்லது எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோமா? ஏனெனில் மானுட வாழ்க்கையின் அடிப்படையே பொருள்தான். வாழ்க்கைக்கு ஆதாரம் பொருள் அதனால்தான் பொருளாதாரம் என்று பெயர் வைத்தார்கள் போலும்.

மானுடத்தின் உடல் சார்ந்த வாழ்க்கைக்கு இன்றியமையாத் தேவை பொருள். பொருள் என்னும் சொல் விரிவான பொருளாக்கம் தரும் சொல்லாகும். உணவு, உடை, இருக்க இடம் முதலியன எல்லோருக்கும் வேண்டிய அடிப்படைத் தேவைகள். இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய நிலையில், மேலும் தேவைகள் வளரும்.

தேவைகளை உழைப்பின் மூலம் அடைவது முதல் நிலை. ஆரம்பநிலை. காலப்போக்கில், சொத்து உருவாக்கும் ஆர்வத்தால், சொத்து, நிலம் முதலியன சேர்த்து, நிலப்பிரபுக் களாகி, பின் மெள்ள மெள்ள சுரண்டும் பொருளாதார நடை முறைக்கு வந்துவிட்டான் மனிதன். இது வளரும் சமூகத்திற்கு நலம் பயக்காது.

ஒரு சமூகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்ற வேலைகள் நடைபெறவேண்டும். இது தவிர்க்க இயலாதது மட்டுமல்ல அப்போதுதான் முழுமையான வளர்ச்சியைக் காணமுடியும். மானுட சமுதாயம் பொருளாதாரம் கல்வி,