பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண திறனுடைய முயற்சிகள் தேவை. இன்று இத்தகைய அருந்திறன் பெரும் பாலரிடம் இல்லை. வறுமொழியாளரும் வம்பப் பரத்தரும், விவாதங்களிலேயே காலத்தைக் கழிப்போரும் நிறைந்து விட்டனர். இன்று இந்தியாவின் 85 கோடி மக்களும் சாப்பிடுகின்றனர். ஆனால் உருப்படியான வளர்ச்சி பொருந்திய பொருளாதாரத்திற்கு உழைப்போர் எத்தனை பேர்?

பழங்காலத்தில் திண்ணைகள் இருந்தன. திண்ணைப் பேச்சு இருந்தது. இன்று திண்ணைகள் இல்லை. ஆதலால், இன்று முச்சந்திப் பேச்சு, கடைப் பேச்சு என்று உழைக்கும் காலமும், மனித ஆற்றலும் விரையமாகிறது. நுகர்வோர் எண்ணிக்கைக் கூடிவிட்டது. ஆனால் நுகர்வோருக்குத் தேவையான பொருள்கள் உற்பத்தி செய்யப்பெறவில்லை. ஒருபுறம் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

நவீன மருத்துவ வசதிகள் முதலியன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதனால் பல நோய்கள் நமது நாட்டை விட்டே விடைபெற்றுப் போய்விட்டன. நோய் வெளியேறிய போதிலும், பசி என்ற நோய். வெளியேறவில்லை. பலர் உயிரோடிருந்தும், பசியினால் வாடுவதில் என்ன பயன்?

போதிய, தேவையான சத்துணவு கிடைக்காமையால் உடல் நலம் குன்றி, சமுதாயத்திற்கு எந்தவிதப் பயனும் இன்றி. வாழ்வோர் எண்ணிக்கை வளர்வது பொருளாதாரத்தைச் சீர்குலையச் செய்யும். கிராமப்புறங்களில் இன்று ஒரு குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்து கூலி பெற்றால் கூடச் சீராக வாழ முடியாத நிலை.

கூலியாகப் பெறும் தொகை கூடுதலாக இருக்கலாம். ஆனால் வாங்கும் சக்தியில்லை. நமக்கு உண்மையான சம்பளம் வாங்குவதிலும் பெறுவதிலும் அக்கறை வேண்டும். உண்மையான சம்பளம் என்றால் அது பணத்தின் அளவு.