பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடந்ததும் நடக்க வேண்டியதும்

25


தொடக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. தலைவர் பெரியார் அவர்களின் திருவுருவ உடைப்பு அறிவிப்பாகும். அருள்நெறித் திருக்கூட்டத் தொடக்ககால அமைப்புக் குழுவில் காரைக்குடி கம்பன் அடிப்பொடி அவர்களும், ஈரோடு செஞ்சொற் கொண்டல் S.மீனாட்சிசுந்தர முதலியார் அவர்களும் செயலாளர்களாக இருந்தார்கள். நாடு முழுதும் தீவிரசமயப்பிரசாரம் செய்யப்பெற்றது. ஒருபுறம் நாத்திகக் கொள்கைகளை எதிர்த்தும், பிறிதொரு புறம் சமயச் சீர்திருத்தக் கொள்கைகளை வலியுறுத்தியும் அதாவது சாதி வேற்றுமை நீக்குதல், தீண்டாமை நீக்குதல், திருமுறைத் தமிழில் அர்ச்சனை செய்தல், சமய நிறுவனங்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய வேண்டுமெனல் ஆகியன எடுத்து மொழியப் பெற்றன. சாதி வேற்றுமைகள் நீங்க வேண்டும் என்ற இலட்சியத்திற்காக 1952இல் மயிலாடுதுறையில் நடந்த மகேசுவர பூசையில் வெளி நடப்புச் செய்தோம். தமிழ் நாட்டில் தீவிரமாக இயக்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் கரூர், புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை, காமராசர் மாவட்டம் மம்சாபுரம் ஆகிய ஊர்களில் திராவிடர் கழகத்தினருக்கும் நமது அணியினருக்கும் மோதல் ஏற்பட்டன. திராவிடர் கழகத்துத் தொண்டர்கள் கருப்புக் கொடி பிடித்தனர். இந்தச் சூழ்நிலையில் நமது இயக்கத்திற்கு அனைத்துச் செய்தித் தாள்களும் நல்ல விளம்பரம் அளித்தன.

அருள்நெறித் திருக்கூட்ட இயக்கத்தின் வளர்ச்சி, தமிழ் இனத்தில் இருவேறு பிளவுகளை உண்டாக்கித் தமிழின மேம் பாட்டைத் தடுத்துவிடுமோ என்று கருதிய சில சான்றோர் நம்மிடம் தூது வந்தனர். 1954-இல் நாமும் பெரியார் அவர்களும் தமிழறிஞர்களின் ஏற்பாட்டின்படி ஈரோட்டில் திரு. சென்னியப்ப முதலியார் அவர்கள் வீட்டில் இரகசிய மாகச் சந்தித்தோம். சிலமணி நேரங்கள் பயன்தரத்தக்க வகையில் கலந்துரையாடினோம். அன்று தலைவர் பெரியார்

கு.XVI.3