பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தமிழகத்தின் நிலப்பரப்பில் - விளை நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் செம்மண் நிலமேயாகும். இந்தச் செம்மண் கண்டமும் ஆழமற்றது; இளகிய இயல்புடையது. கார நிலையுமின்றி அமில நிலையுமின்றி, சம நிலையில் இருக்கிறது.

மண் உயிரற்ற பொருள் அன்று. பல்வகை உயிரினங்களின் வாழிடம் அது. நுண்ணாடிக்கும் புலப்படாத வைரஸ் முதல் பாக்டீரியா, ஆக்டினோமை சீட்ஸ், பாசி, ஆம்பி, ப்ரோட்சோவர், மண்புழு, எறும்பு, இன்னும் பிற பூச்சிகள், பிராணி இனங்கள் அதில் வாழ்ந்து வருகின்றன.

ஒரு கைப்பிடி மண்ணில் கோடானு கோடி உயிர்கள் இருக்கின்றன. அவற்றில் சில, சூழ்நிலை செம்மையாக வாய்ந்திருப்பின் மிக மிக விரைவாகப் பெருக்கமடைகின்றன. குளிர் மண்ணில் உயிர்களுடைய செயல் குறைவுபடுகிறது. மண்ணில் ஈரம், வெப்பம், காற்று ஆகிய மூன்றும் செவ்வையாக அமைந்தால் அவ்வுயிர்களுக்குத் தகுந்த சூழ்நிலை ஏற்படுகிறது.

சுறுசுறுப்பாக மண் புழுக்கள் நிறைந்திருக்கும் மண், வளம் நிறைந்திருப்பதை உணர்த்தும். அதேபோல் பல்வகை உயிரினங்கள் கண்ணுக்குப் புலனாகாவிடினும் ஒரு வாரத்தில் எண்ணற்றனவாக கணக்கிலடங்காதனவாகப் பல்கிப் பெருகி வளர்கின்றன.

மண் வளம் என்பது அளவற்ற சொத்து மதிப்புடையது. வேளாண்மை பொருளாதாரத்தின் உயிர்நாடி, மண் வளத்தைப் பாதுகாத்தலேயாம். மண்வளத்தை இரசாயன உரங்கள் மூலம் பாதுகாக்க முடியாது. இரசாயன உரங்கள் உரம் என்று கூறப்படுவதே ஒரு உபசார முறைதான்.

நிலத்தின் வளத்தைக் காப்பது, இயற்கைத் தொழு உரமும், தழைச்சத்து உரமுமே என்பதை நம் விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும். இரசாயன உரங்கள் நிலத்தில்