உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடந்ததும் நடக்க வேண்டியதும்

27


கூடிய பொதுமை நலம் மிக்க சமுதாயத்தைக் காண்பதுமே நமது விருப்பம். இந்த விருப்பத்தை இலட்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு நாம் அந்நியராக இருப்பது ஆச்சரியமில்லை. வரவேற்கத்தக்கதே. பெரியாருக்குப் பொன்னாடை போர்த்திய பிறகு உயர்குடி மனப்பான்மையுடன் மெல்ல ஒதுங்கினர். உடன்பாடு பேசினர். நாம் ஏற்கவில்லை. வெறுக்கத் தொடங்கினர். இருட்டடிப்புச் செய்தனர். அருள் நெறி இயக்கத்திலிருந்த சிலர் இயக்கத்தை விட்டு வெளியேறினர்; வேறு சிலர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயன்றனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் நமது கருத்தைச் சார்ந்தோர் கூடி, தம்மீது நம்பிக்கை வாக்கையளித்து மாறுபட்ட சக்திகளை வெளியேற்றினர். இது ஒரு கால கட்டம்.

தொடர்ந்து இயக்கப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. 1955இல் அருள்நெறித் திருப்பணி மன்றம் தொடங்கப் பெற்றது. இது பூரணமான நிர்மானப்பணி செய்யும் இயக்கமாகும். இந்த நிறுவனம் விரைந்து வளர்ந்து வந்தது. இந்த அமைப்பு இன்று ஒரு கல்லூரி, இரண்டு மேனிலைப் பள்ளிகள், நான்கு உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து நடுநிலைப் பள்ளிகள், மூன்று தொடக்கப் பள்ளிகள், ஒரு மாணவர் புண்ணிய விடுதி, பிறிதொரு மாணவர் விடுதி (கட்டணம்) முதலியன நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு அருள்நெறித் திருக்கூட்டத்தின் நீண்ட நெடிய நாள் குறிக்கோளாகிய "தமிழகத் திருமடங்கள் இணைந்து செயல்பட வேண்டும்" என்ற கருத்துக்கு 1966ஆம் ஆண்டில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த திருமிகு கோ. சாரங்கபாணி முதலியார் அவர்கள் மூலம் அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் எம். பக்தவத்சலம் அவர்களின் உதவியுடன் "தமிழ்நாடு தெய்விகப் பேரவை" தொடங்கப் பெற்றது.