பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

393


பெறுவோம்! கலப்படமில்லாத நுகர் பொருள்களைப் பெறுவோம்! நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களையும், மருந்துகளையும், உடுத்தும் ஆடைகளையும் பெறுவோம்!

கூட்டுறவு இயக்கம் முதன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கியது. இங்கிலாந்தில் கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல் என்ற நெறிமுறையில் வாழ்வோர் சிலர் தோன்றினர். இவர்களில் முதன்மையானவர் ஓவன். ஓவன் அவர்களைக் "கூட்டுறவுத் தந்தை” என்று பாராட்டுவர். கூட்டுறவு இயக்கம் கி.பி, 1844-ல் தோன்றியது.

நமது நாட்டில் 1924-ல் தொடங்கியது. இலட்சிய நோக்குடைய சிலர் கூடி, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக அமைக்கப்படுவது கூட்டுறவு. அச்சிலர் காலப்போக்கில் பலராகவும் அமையலாம்.

ஆயினும், சமூகச் சிந்தனை இலட்சியப் போக்கு, கருத்தொற்றுமை உடையோர்களே கூட்டுறவில் உறுப்பினராகச் சேரவேண்டும். இங்ஙனம் அமையாவிடில் வண்டியின் நுகத்தடி தெற்கு நோக்கியும், வண்டி வடக்கு நோக்கியும் போகவேண்டும் என்று எண்ணுவதைப் போல் முடியும்.

கூடி வாழ்தல் என்பது எளிதன்று. சுயநலமும், தன் முனைப்பும் மனிதனைக் கூடிவாழ, கூடித் தொழில் செய்ய அனுமதிக்காது. ஒருமையுளராகி உறவுகளைப் பேணி வளர்க்கத் தெரியாதார் குற்றங்களை முயன்று காண்பர், இயல்பாகக் குற்றங்கள் இல்லையெனினும் படைப்பர்; சிறுமை தூற்றுவர். இத்தகு மனப்போக்குடையோர் கூட்டுறவு வாழ்க்கைக்கு ஒத்துவர மாட்டார்கள்.

நோயும், மரணமும் துரத்தினாலும், எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மருத்துவர்களை நாடுகின்றோம்; மந்திரங்களை நாடுகின்றோம்; சாமிகளைக் கும்பிடுகின்றோம். அதுபோலத்தானே மனித உறவிலும்

கு.xvi 26

கு.xvi 26