நடந்ததும் நடக்க வேண்டியதும்
29
அரசு அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் ஆவதற்குரிய வழி செய்யப்பட்ட மசோதாவைக் கொண்டு வந்தது. அதாவது "பிறப்பில் வேறுபாடின்றி அனைவர்க்கும் பயிற்சி கொடுத்து அனைவரையும் அர்ச்சகராக்குவது” என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது, சட்ட மன்றத்தில் இந்த மசோதாவை எதிர்க்கும்படி நம்மைக் காஞ்சி காமகோடிபிடப் புதிய பெரியவர் கேட்டுக் கொண்டார்கள். எதிர்ப்புக்குரிய காரண காரியங்களை நாங்கள் விவாதித்த பொழுது புதிய பெரியவர் எடுத்துக் கூறிய காரணங்கள் நிற்கவில்லை. அதுமட்டுமின்றிக் காமகோடி பீடமோ மற்ற மதத் தலைவர்களோ இதுவரை அர்ச்சகர் மசோதாவை வெளிப்படையாக எதிர்க்கவில்லை. பேரவை கூடி விவாதித்து எதிர்ப்பதற்குரிய கால எல்லையும் இல்லை. இந்நிலையில் அம்மசோதாவை எதிர்ப்பதற்குரிய நிலையில் நாம் இல்லை என்பதை அறிவித்தோம். பேரவையைக் கூட்டி அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக மறுத்துத் தீர்மானம் நிறைவேற்றினால் நிறுவனக் கட்டுப்பாடு என்ற அடிப்படையில் நாமும் நமது கொள்கைக்கு மாறாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினோம். இதற்குப் புதிய பெரியவர் "தாங்கள் பேரவையின் தலைவர்; ஆதலால், எதிர்த்தேயாக வேண்டும்” என்று கூறினார். புதிய பெரியவர் வேதனைப்படுவதை நம்மால் உணர முடிந்தது. இதிலிருந்து நமக்கும் காமகோடி பீடத்துக்கும் பேரவைக்கும் இருந்த இடைவெளி மேலும் அதிகரித்தது. காஞ்சி காமகோடி பீடத் திருமடத்தின் சார்பில் பரிசுகள் வழங்குவதற்குப் பேரவையிலிருந்து பணம் கேட்டு எழுதினார்கள். தனிப்பட்ட நிலையில் ஒரு திருமடம் நடத்தும் போட்டிகளுக்குப் பேரவை பணம் தருவதில்லை என்று பேரவைச் செயலாளர் எழுதிவிட்டார். இதனை எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எழுதியதில் தவறில்லை. இதற்குப் பிறகு பேரவையுடன் உறவைக் காமகோடி பீடம்