பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறியவும், அறிந்த அறிவை உணர்த்தவும் கூடியன. பொறிகள் நுகர்வுச் சாதனங்கள் மட்டுமல்ல. அறிவு அடிப்படையில் செயற்படும் தொழிற் கருவிகளுமாகும். இலட்சியத்தையும், இலட்சியத்தின் அடிப்படையிலான செயலையும் ஆய்வு செய்து இலட்சியத்தைத் தேர்வு செய்துகொள்வதே அறிவியல் பாங்கு.

அன்பாக இருப்பது என்பது ஒரு குணம் - பண்பு. இந்த அன்பு கூட, சுயநலத்தின் காரணமாக அமையலாம். அத்தகைய அன்புக்குக் கூட இடைமுறிவுகள் உண்டு. ஆனால், அன்பே இலட்சிய அடிப்படையிலிருப்பின் அந்த அன்பு வளரும். பிறை நிலாப் போல வளரும்; எல்லா இடர்ப்பாடுகளையும் கடந்து வளரும். பிரிவதற்குரிய காரணங்கள் தோன்றினாலும் அக்காரணங்கள் புறக்கணிக்கப்படும்.

மானம்கூட கூடப்பிறந்ததுதான். அதுவே இலட்சிய அன்பு. இத்தகைய அன்புடையோர் சில பொழுது மரணத்திலும் கூட ஒன்றாகிவிடுவர். இந்த அன்பு, இலட்சிய அன்பு. இங்ஙனம் அன்பு, இலட்சிய அன்பாக மாற வேண்டு மானால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இயல்பு தேவை. அறிவறிந்த நட்பும் உறவுமே இலட்சிய அன்பாக, உறவாக முடியும், வளர முடியும்.

எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் நிலையாக நின்று உழைத்திட, தளர்ச்சியில்லாமல் அந்தத் திசையில் செல்ல அறிவு வேண்டும். இலட்சியத்தின் வழியில் நடைபெறும் பணிகளை, செய்யும் காரியங்களை அறிவியல் பார்வையால் ஆய்வு செய்து, குறைகளை நீக்கச் செய்துகொண்டே போக வேண்டும்.

இலட்சிய வாழ்க்கையை விரும்புபவர்கள் தங்களுடைய சூழ்நிலைகளின் காரணமாகப் பலவீனம் அடைந்து விடக்கூடாது. சூழ்நிலைகளையும் சரிப்படுத்திக் கொண்டு அவற்றைக் கருவிகளாக அமைத்துக் கொள்ள வேண்டும்.