பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விடாது. ஒரு இலட்சியம் தோன்றினால்தான் சமுதாயம் உருவாகும்.

இன்று, நம்பிக்கையும் நல்லெண்ணமும் நிறைந்த ஓர் இலட்சிய நோக்கமுடைய சமுதாயத்தைக் காண்பதற்கு, தடைகள் பலப்பல உள்ளன. அவற்றுள் தலையாயது பணம்!

அடுத்த தடைகள் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீயபண்புகள்! இத்தீய பண்புகளின் படைக்கலன்களாக உள்ளவை பூட்டுக்கள், களவு - காவல், சுவர்கள், வேலிகள் பட்டங்கள், பதவிகள் முதலியன. இவையெல்லாம் ஒருங்கிணைந்துகொண்டு சமுதாயம் அமைத்தற்குரிய அடிப்படைகளைத் தகர்க்கின்றன; மனிதனைப் பிரித்துவிடுகின்றன.

இன்று ஊர், அரசுக் கணக்கின்படிதான் உள்ளது. ஊர் என்று இலக்கணப்படி "ஒருவருக்காக எல்லாரும், எல்லாருக்காகவும் ஒருவர்" என்ற இலட்சியம் மக்களிடத்தில் இல்லை. ஆரோக்கியமில்லாத போட்டிகள், இலாப வேட்டைகள், தலைமைத்தனத்திற்கு ஆசை முதலியன ஊரை நாள்தோறும் அழித்து வருகின்றன. இவற்றை நாளும் எதிர்த்துப் போராடிச் சமுதாயத்தை விரிவாக்க வேண்டும்; இலட்சியத்தை உருவாக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மனிதகுலத்தில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை அகற்றி, மனிதகுலத்தைச் சமுதாயமாக உருவாக்கலும், ஊர் கூடிவாழ அமைத்தலும் கூட ஒரு நல்ல இலட்சியமாகும். இந்த இலட்சியத்தை இந்தத் தலைமுறையில் அடைந்தால் இந்தியா வளரும்; வாழும்!

"பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை” என்பது வள்ளுவம்! "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு! சமூகத்தை இயக்கும் சக்தி பொருளுக்கே உண்டு! நமது நாடு, வளமான நாடு! பொருள் உற்பத்திக்கு ஏற்ப, இயற்கை வளமும் மனித