பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசியல் தோன்றியது; காலப்போக்கில் ஆட்சி முறை வந்தது! நமது நாட்டை ஆண்ட அரசர்கள் மக்கள் நலம் நாடியவர்கள். அதனால்தான் பிரான்சு, சோவியத் போன்ற நாடுகளில் தோன்றிய புரட்சிகளைப் போல நமது நாட்டில் புரட்சி தோன்றவில்லை. என்றும் நமது நாட்டின் ஆட்சி, நீதியைச் சார்ந்திருந்தது. அந்த நீதி சார்ந்த ஆட்சிமுறையை நாம் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்.

"ஒரு குலத்துக்கு ஒரு நீதி" என்ற கொள்கையை மறுத்து வளரும் நாம் "ஆட்சிக்கு ஒரு நீதி” என்ற முறையை மேற்கொள்ளக் கூடாது. மிக உயர்ந்த தரமான மக்களாட்சி முறையை நாம் நடத்தவேண்டும். தேர்தலில் மட்டும் ஜன நாயகமல்ல "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பெரு நெறி நமது நாட்டு அரசியலில் ஆட்சியில் இடம்பெற வேண்டும்.

பொற்கைப் பாண்டியன் வரலாறு கண்ட நாடு நமது நாடு. இந்த நாட்டில் காவல்துறைக்கு மகத்தான பொறுப்புள்ளது. காவல்துறை அதன் ஒழுகலாறுகளை உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் போலீசு ஆட்சி வருவதை, போலீசுக்காரர்களும் விரும்ப மாட்டார்கள். இது நம்முடைய நம்பிக்கை. ஏன்? கோபுரத்திற்குக் கலசம் போல, நாட்டிற்குக் காவல்துறை அமையவேண்டும்.

மக்கள், நாட்டின் வளர்ச்சியில் தனிப்பட்ட முறையிலும் கூட்டு முறையிலும் பங்கேற்க வேண்டும். நம்முடைய நாடு சட்டத்தால் ஆளப்படுவது. ஆதலால், சட்டத்திற்கு மக்கள் மதிப்பளித்து ஒழுகவேண்டும்; நடந்து கொள்ள வேண்டும். சட்டங்களும் விதிமுறைகளும் மதிக்கப்படும் நாட்டில்தான் மக்களாட்சி முறை பயன்தரும். சட்டத்தை முடமாக்குவது அராஜகத்திற்கு வழி வகுக்கும்.

நம்முடைய நாட்டில் தேசியக் குடிமைப் பண்புகளைப் போற்றி வளர்ப்போம்! அரசின் சமுதாய மேம்பாட்டுப்