பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"சாலி நெல்வின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவேரி புரக்கும் நாடு”

என்று காவேரி நாட்டின் சிறப்பினைக் கூறும் ஒரு வேலி நிலம் 62/3 ஏக்கர். ஒரு ஏக்கருக்கு விளைவு 150 கலம் நெல் அதனால் வளம் கொழித்திருந்தது. பசித்தவர்க்கு இல்லை யெனாது உணவு கிடைத்தது. நாலடியாரும் “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க" என்றது. தமிழ் இலக்கிய உலகம் சமுதாய மேம்பாட்டுக்குரிய பொருள் ஆக்கம் வேளாண்மை மூலமே எனக் கூறியது. திருவள்ளுவரும்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்"

என்றார். புரட்சிக் கவி பாரதி,

"உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்!”

என்றான். செந்தமிழ்ப் புலவர்களிலேயே சங்கப்பாடல்கள் இயற்றிய புலவர்களில் ஒருவர் பெயர் ஓரேருழவர் என்பது. இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. செல்வ மேம்பாட்டில், பொருளாதார ஆக்கத்தில் பறம்புமலை சிறந்திருந்தது. பறம்புமலையை வேள்பாரி ஆண்டான். பாரி இயற்கையை - தாவர இனங்களை மிகவும் கவனமாகப் போற்றியதன் விளைவே முல்லைக் கொடிக்குத் தேரீந்தது. அதனாலேயே அவனுடைய பறம்புமலை உழவர் உழாதன நான்கு பயன் உடையதாக விளங்கியது. அந்நான்காவன; வள்ளிக்கிழங்கு, மூங்கில் அரிசி, பலாப்பழம், தேன்.

ஆதலால், ஒரு நாடு பொருளாதாரத்தில் மேம்பாடுற்று விளங்கவேண்டுமாயின் வேளாண்மைப் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும். நம்முடைய நாடு, இன்னமும் உணவுப் பொருள்களில் தற்சார்புடையதாக இல்லை! நாம்