பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்க்கவும்; அடர்த்தியான காடுகளை வளர்க்கவும். அகன்ற இலைகளையுடைய மரங்கள் அதிகமான மழையை வரவழைக்கும். பெய்யும் மழைத்தண்ணீரை, சொட்டு நீர்கூட வீணாகாமல் தேக்கிவைத்து, குறைவான தண்ணீரைப் பயன்படுத்திப் பயிர்களை வளர்த்துப் பயன்பெற வேண்டும்.

தண்ணீரைப் பாதுகாத்தல் என்பது சமுதாய மேம்பாட்டில் - பொருளாதார மேம்பாட்டில் முக்கியமான பணி.

இந்தப் பணியை, கடமையை நம்மில் பலர் இன்று உணரவில்லை. பல கண்மாய்கள், வரத்துக் கால்கள் தூர்ந்து கிடக்கின்றன. தூர்ந்து கிடப்பதோடன்றி அவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கண்மாய்களை, ஏரிகளை ஏரிகளின் நீர்ப்பரப்புப் பகுதிகளை, தண்ணீர் வரத்துக் கால்களை ஆக்கிரமிப்பது குற்றம், சமூகக் குற்றம்; பாபம்! இதற்கோர் முற்றுப்புள்ளி வைக்காகமல் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்!

திருக்குளங்களைக் கவனிக்காமல் திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் செய்து கொண்டிருக்கிறோம்! நாம் மழைவளம் பெறுவோம்! பெய்யும் மழை வளத்தைப் பாதுகாப்போம்!

"நிலனெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண் தட்டட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!”

என்ற கவிஞனின் பாடல் வரிகளுக்கு வாழ்க்கையில் பொருள் காண்போமாக!

இயற்கை வளம் இந்நிலவுலகத்திற்கு ஒரு கொடை இயற்கையென்பது என்ன என்று வரையறை செய்ய இயலாது. நம்மைச் சுற்றியுள்ள உலகமனைத்தும் இயற்கையே! மலைவளம், காடுவளம், நிலவளம், வளி வழங்கும் ஞாலம், வெப்பம் தந்து வாழ்வளிக்கும் ஞாலம் திரிதரு