பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

421


கதிரவன் தண்ணென நிலவு பொழியும் சந்திரன், விலங்கினங்கள்; பறவையினங்கள் எல்லாமே மானுட வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவை; வாழ்க்கைக்குத் தேவையானவை.

அதனால்தான் கடவுளைக் காணும் களம், இயற்கை என்றனர். அப்பரடிகள் "மூரி முழங்கொலநீர் ஆனான் கண்டாய்!” என்றும் "வாசமலரெலாம் ஆனாய் நீயே!” என்றும் பாடினார். "பழத்திடைச் சுவை ஒப்பாய்!” என்று சுந்தரர் அருளியுள்ளமை அறிக.

தாயுமானார் மலர் கொய்து இறைவனுக்குப் பூசனை செய்ய மனம் ஒருப்படா நிலையில் "பார்க்கின்ற மலரூடும் நீயிருத்தி! பனிமலர் எடுக்கவும் நண்ணுகிலேன்” என்றார். இளங்கோவடிகள் தமது காப்பியமாகிய சிலப்பதிகாரத்திற்கு, கடவுள் வாழ்த்தே பாடவில்லை, இயற்கையை வாழ்த்தினார்!

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி
குளிர்வெண்குடை போன்று, இவ்
அங்கண் உலகளித்த லான்."

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்."

"மாமழை போற்றதும் மாமழை போற்றதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேல்நின்று தான் சுரத்த லான்”

என்று இயற்கையை வாழ்த்தியே காப்பியத்தைத் தொடங்குகின்றார். இயற்கைச் சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது இயற்கையின் குறையல்ல. நாம் இயற்கையை - இயற்கையினாலாய சுற்றுப்புறச் சூழலை முறையாகப் பாதுகாக்காமையே காரணமாகும்.