பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிர்ப்பு அடங்கும். இந்த இடைவெளிக் காலத்திற்குள் நாம் வாழ்ந்துவிட வேண்டும். நாம் வாழப் பிறந்தோம். "வாய்த்தது நந்தமக்கோர் ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்றார் அப்பரடிகள், சாவது எளிது.

பிறவி என்பது என்ன? ஆன்மா என்பது என்ன? நான் யார்? என் உள்ளம் யார்? என்ற ஆராய்ச்சி இல்லாமல், தெளிவான அறிவு இல்லாமல், எப்படி வாழ முடியும்? இந்த "ஆன்மா" விஷயத்தில், தத்துவச் சிந்தனையாளர்களிடையிலும், மதஸ்தாபகர்களிடையிலும் நிலவுவது மாறுபட்ட சிந்தனை போக்குத்தான். ஆன்மா, பிறப்பு, இறப்பு குறித்து தமிழ் மரபு வழிச் சிந்தனையே அறிவியல் அடிப்படையில் சரியானது என்று துணிய முடிகிறது.

"உள்ளது போகாது. இல்லது வாராது” என்பது ஒரு தர்க்க அடிப்படை. இந்தத் தர்க்க நியாயத்தின்படி ஆன்மா உண்டென்பதும், அது நிலையானது என்பதும் பெறப்படும் உண்மைகள். கடவுள் ஆன்மாக்களைப் படைத்தான் என்ற கொள்கை ஏற்புடையதன்று. கடவுள் குறைவிலா நிறைவு. நிறைவிலிருந்து குறை தோன்ற முடியாது. ஆதலால், கடவுள் ஆன்மாக்களை, உயிர்களைப் படைத்திருக்க முடியாது. "எனது” என்றும், "நான்” என்றும் உரிமை கொண்டாடும் ஒன்று உளது. அதுவே ஆன்மா.

ஆன்மா என்பது சமஸ்கிருதச் சொல். உயிர் என்பது தமிழ்ச் சொல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கொள்கையில் உடன்பாடு மிகுதியும் உடையது தமிழ் மரபு. உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், உயிர்கள் ஓரறிவுயிர் தொடங்கி, பரிபக்குவ நிலையினுக்கு ஏற்ப மாறி மாறிப் பிறந்து, கடைசியாக ஆறறிவு உடைய மனிதனாகப் பிறக்கிறது என்பது தமிழ்ச் சிந்தனை!

அறிவு சார்ந்த பரிணாம வளர்ச்சியில், பாம்பு சட்டையை உரித்துப் போட்டுவிட்டுப் புதுச் சட்டையுடன்