பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

443


மூப்பு அடையாமல், சாகாமல், வறுமை வளர்ந்து வருகிறது. இன்று வறுமை "வறுமைக் கோடு" என்று வெளிப்படத் தோன்றி, அரசின் அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டது. இந்த வறுமையை இந்தத் தலைமுறையில் அகற்றியே ஆகவேண்டும் என்று உறுதி பூணுங்கள்.

நடுத்தர மக்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கும், ஏழைகளுடைய பொருளாதார ஆக்கத்திற்கும் நம் நாட்டில் தடைகள் பல உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கறுப்புப் பணத்துடன் கொழுத்து வளரும் தனியுடைமை, பன்னாட்டு மூலதனம் முதலியன. மேலும் நம்முடைய பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிய தடை நிலையாமைத் தத்துவம் - விதித்தத்துவம். இவற்றை எல்லாம் எதிர்த்துப் போர்க்குணத்துடன் போராடுவோம்! வறுமையிலிருந்தும், சிறுமையிலிருந்தும் விடுதலை பெறுவோம்!

மானுடம் அறிவுப் பிறவி! - அறிவு ஜீவன்! ஆனால் அறிவைத்தான் நம்மால் பெறமுடியவில்லை. கல்வி, கேள்வி முதலிய சாதனங்கள் பல்கிப் பெருகியும் அறிவு வளரவில்லை. ஏன்? இன்று அறிவு வேட்கை உடையோர் யார்? அறியாமையையே அறிவு என்று நினைத்துக் கொண்டு, தலையால் நடப்பவர்கள் பல்கிப் பெருகி விட்டனர்.

எங்கு நோக்கினும் பட்டதாரிகள்! ஆனால் படைப்பாளிகளைக் காணோம்! ஏன் இந்த அவலம்? கற்க! தொடர்ந்து கற்க! கற்ற, கேட்ட கருத்துக்களைச் சிந்தனை செய்க! அச்சிந்தனைக்கு உருவம் தருக! உருவம் தரும் முயற்சியில் அறிவு முகிழ்க்கும்! அறிவு துன்பத்திலிருந்து பாதுகாக்கும்! அறிவைத் தேடுவோம்! நாளும் தேடுவோம்!

அறிவு நுட்பமானது அறிவு பயனுடைய வகையில் இயங்க உழைப்புத் தேவை. இந்த உடல், உழைப்பால் ஆயது, உழைப்புக்காகவே உருவானது. உழைப்பும், அறிவறிந்த ஆள்வினையும் இந்த உலகை சென்ற காலத்தில் உருவாக்கி