பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வில்லை ஏன் - சுதந்திரத் திருநாளைக் கூட வீட்டு விழாவாக, பொது விழாவாக மக்கள் கொண்டாடுவதில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகும் பழைய தீபாவளிதான் பெரிய விசேஷமாக இருக்கிறது. ஏன் - அரசு கூட துணி விலைச் சலுகைகளைச் சுதந்திர தினத்திற்குத் தரவில்லை. சுதந்திர தின விழாவை வீடுகளிலும், நாட்டு மக்கள் விரிவாகக் கொண்டாடுதல் வேண்டும்.

'நாமிருக்கும் நாடு நமது' என்ற உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 18 வயது நிரம்பியதும், ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாக்காளர்கள் தவறாமல், எந்தவிதமான தூண்டுதலும் இன்றி, கையூட்டும் இன்றி, வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும். தவறாமல் எல்லோரும் வாக்களிப்பது என்ற கடமை மேற்கொண்டொழுகினால், கள்ளத்தனமாக ஒருவர் பெயரில் மற்றவர் வாக்களிக்க இயலுமா? அல்லது செத்தவர்தான் எழுந்து வந்து வாக்களிப்பாரா? அடையாள அட்டை அவசியப்படுமா? நம்முடைய தவறுகள்தானே அடையாள அட்டை கேட்கும்படியாகச் செய்துவிட்டது?

சுதந்திர ஜனநாயக ஆட்சியில் எல்லோரும் வாக்களிப்பது கடமை. இதில் தவறக்கூடாது. சுதந்திர நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்குரிய பணிகளில் ஈடுபட உரிமை உண்டு. ஈடுபடவும் வேண்டும். அவரவர் நிலைக்கு ஏற்பத் தாம் வாழும் ஊரின் நலனுக்கும், மேம்பாட்டுக்குமுரிய பணிகளிலாவது ஈடுபட வேண்டும். அதுவும் இயலாது போனால் குறைந்த பட்சம் ஊரின், சமூகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்காமலாவது வாழ்தல் வேண்டும்.

சமூக ஒற்றுமைக்கு விரோதமாக, கோள் சொல்லுதல், சிண்டு முடிந்துவிடுதல் போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் வேண்டும். ஊரைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீதிகளில் குப்பைகளைப் போடுதல், கழிவு